×

10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு: விவசாயிகளே சொந்த செலவில் சந்திரன் வாய்க்காலை தூர்வாரினர்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் 34 முக்கிய மதகுகள் வழியாக சுமார் 4,856 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனம் அளிக்கும். மறைமுகமாக 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம்  பெறும். இந்நிலையில் 34 வாய்க்கால்களில் ஒன்றான சந்திரன் வாய்க்கால் கடைமடை பகுதிகளான கூடுவெளிச்சாவடி, கொடியாளம், முகையூர், பெருங்காலூர், சிதம்பரம் உள்ளிட்ட 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளித்து வருகிறது. பல வருடங்களாக தூர் வாராமல் கிடப்பில் போடப்பட்ட சந்திரன் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் நடப்பு ஆண்டு 2018-19 க்கான தமிழக அரசின்  குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சந்திரன் வாய்க்காலில் இருந்து பிரியும் உள்ளூர் வாய்க்கால்கள் மட்டும் பெயரளவில் தூர்வாரப்பட்டன. இதில் சந்திரன் வாய்க்காலை தூர் வாரவில்லை.

அதன் காரணமாக சந்திரன் வாய்க்காலில் இருந்து நேரடி பாசனம் பெறும் மேற்கண்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தற்போது நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்ட நிலங்கள் வறட்சி காரணமாக  வெடித்து பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த வருட சம்பா பயிர் கருகியது போக  மீதமுள்ள பயிர்களை காப்பாற்றும் விதமாக அப்பகுதி விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் சொந்த செலவிலும் உடலுழைப்பிலும் சந்திரன் வாய்க்காலில் 7 கிலோமீட்டர்கள் வரை வளர்ந்து மண்டிக்கிடந்த நாணல் உள்ளிட்ட நீர் தாவரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 3 நாட்களாக ஈடுபட்டு
வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி வீராணம் பாசன விவசாயிகளிடம் கேட்டபோது, குடிமராமத்து பணியின்கீழ் அளிக்கப்படும் தூர்வாரும் பணிகள் விவசாய சங்கங்களுக்கு அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை லால்பேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் சூழ்ச்சியில் அங்கு பணிபுரியும் இளநிலை பொறியாளர் மறைமுகமாக நடத்தும் விவசாய சங்கம் மூலம் அவரது பினாமிக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

 இதில் ஆளும் கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு நேரடி தொடர்பும் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆளும் கட்சியின் பின்புலம் இருப்பதால் ரூ.30 லட்சத்திற்கான பணியை முறையாக செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக  சந்தேகிக்கின்றோம்.
எனவே நாங்களே ஒன்றிணைந்து சந்திரன் வாய்க்காலை தூர்வாரி வருகிறோம் என தெரிவித்த விவசாயிகள். இவ்வருடம் நடைபெற்ற குடிமராமத்து பணியில் நடைபெற்றுள்ள முறைகேட்டினை நேரடியாக ஆய்வுசெய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : paddy land ,Moon , 10 Thousand Acres of Paddy Cultivation: Farmers Surround The Moon
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...