×

இந்திய விமானப் படைக்கு நவீன ஏவுகணைகள் கொண்ட ரபேல் ஈடு இணையற்ற பலத்தை அளிக்கும்: எம்பிடிஏ தலைவர் பேட்டி

புதுடெல்லி: ‘‘நவீன ஏவுகணைகளுடன் வரும் ரபேல் போர் விமானங்கள், இந்தியாவுக்கு ஈடு இணையற்ற பலத்தை அளிக்கும்,’’ என எம்பிடிஏ ஏவுகணை நிறுவன தலைவர் லாயிக் பெடவாச்சே கூறியுள்ளார். இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை நவீன ஏவுகணைகளுடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்க, 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் விமானப்படையில் ‘மெட்டர்’ (விண்கல்) மற்றும் ‘ஸ்கால்ப்’ ரக நவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏவுகணைகளுடன் சேர்த்துதான் ரபேல் போர் விமானத்தை இந்தியா வாங்குகிறது. இந்த ஏவுகணைகளை ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ தயாரிக்கிறது.

இந்த ஏவுகணைகள் பற்றி எம்பிடிஏ நிறுவனத்தின் இந்திய தலைவர் லாயிக் பெடவாச்சே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:எம்பிடிஏ நிறுவனத்தின் மெட்டர் ஏவுகணை விமானத்தில் இருந்து வான் இலக்குகளை அதி வேகத்தில் தாக்கக்கூடியது. ரேடார் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஏவுகணை எதிரி நாட்டின் அதிவேக விமானங்கள், சிறிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும். இது உலக சந்தையில் மிகவும் வெற்றிகரமான  ஏவுகணை.  ‘ஸ்கால்ப்’ ஏவுகணை தரை இலக்குகளை அதிக ஆழம் வரை ஊடுருவிச் சென்று தாக்கக் கூடியது. வளைகுடா போரில் இந்த ஏவுகணைகளை இங்கிலாந்து, பிரான்ஸ் விமானப்படைகள் பயன்படுத்தின. தற்போது, இதுபோன்ற ஏவுகணைகள் இந்தியாவிடம் இல்லை. ரபேல் போர் விமானங்களுடன் வரும் இந்த ஏவுகணைகள் இந்திய விமானப்படைக்கு ஈடு இணையற்ற பலத்தை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அபினந்தன் படைப்பிரிவுக்கு விருது
பாலகோட் தாக்குதலுக்கு மறுநாள், பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்தியப் பகுதியில் ஊடுருவின. அவற்றை இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டியடித்தன. இந்த சண்டையில் இந்தியாவின் மிக்-21 போர் விமானத்தில் சென்ற விங் கமாண்டர் அபினந்தன் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அவரது விமானமும் சுடப்பட்டதால், பாராசூட்டில் குதித்து தப்பினார். பாகிஸ்தானிடம் சிக்கிய அவர், பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் இடம் பெற்றுள்ள விமானப்படையின் 51வது படைப்பிரிவுக்கு விமானப்படை விருதை, விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ராகேஷ் சிங் பாதுரியா வழங்க உள்ளார். இந்த விருதை 51வது படைப்பிரிவின் தலைவர் குரூப் கேப்டன் சதீஷ் பவார் பெறுகிறார். இதேபோல் பால்கோட்டில் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது லேசர் குண்டுகளை வீசிய மிராஜ்-2000 9வது படைப்பிரிவுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

முதல் விமானம் இன்று ஒப்படைப்பு
பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து, இந்தியா 36 ரபேல் விமானங்களை வாங்குகிறது. இவற்றில் முதல் விமானம், பாரீசில் நடக்கும் விழாவில் இந்தியாவிடம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுகிறது. இதை பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு சென்றுள்ளார். விமானம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதில் அவர் பயணம் செய்து அதன் திறனை நேரடியாக அறிய உள்ளார். இந்த விமானம் இன்று ஒப்படைக்கப்பட்டாலும், முதல் கட்டமாக வழங்கப்பட உள்ள 4 விமானங்களுடன் சேர்த்து அடுத்தாண்டு மே மாதம்தான் இந்தியா வரும் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தை பெற்றுக் கொள்ளும் ராஜ்நாத், அங்கு ஆயுத பூஜையை செய்ய உள்ளார்.


Tags : Rafael ,MBDA ,President ,Indian Air Force , Rafael's compensation , modern missiles, Indian Air Force ,unparalleled strength, Interview , MBDA President
× RELATED ரஃபேல் விமானம் முதல் தேர்தல்...