×

காரைக்காலில் நிலத்தடி நீர் மூலம் விவசாயம் செய்ய திருநள்ளாறில் 6 இடங்களில் ரூ90 லட்சத்தில் ஆழ்குழாய்

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாற்றில் 6 இடங்களில் ரூ90 லட்சம் செலவில், வேளாண் பயன்பாட்டுக்கு ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளாறுக்கு மேற்குப்புற பகுதியில் நிலத்தடி நீர் மூலம் விவசாயம் செய்யக்கூடிய வசதிகள் மாவட்ட வேளாண்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், காரைக்கால் திருநள்ளாறு இளையான்குடி, சேத்தூர் கீழவெளி உள்ளிட்ட சில கிராமத்தில் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் கிடைப்பதில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, மாற்று ஏற்பாடு செய்யவேண்டுமென விவசாயிகள், புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனிடம் வலியுறுத்தியிருந்தனர்.

புதுச்சேரி வேளாண் அமைச்சரின் அறிவுறுத்தலின்படி வேளாண் பொறியியல் குழுவினர் ஆழ்குழாய் இருந்த பகுதிகளை ஆய்வு செய்து, மாற்று இடத்தில் புதிதாக ஆழ்குழாய் பொருத்தும் வகையிலான நடவடிக்கைகள் வேளாண் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி, திருநள்ளாறு இளையான்குடி பகுதியில் கடந்த மாதம் ஆழ்குழாய் மாற்றியமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது. சேத்தூர் கீழவெளி பகுதியில் இயந்திரங்கள் மூலம் ஆழ்குழாய் பொருத்தும் பணி பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் மற்றும் வேளாண் அதிகாரிகள், வேளாண் துறையின் பொறியியல் பிரிவினர், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து, காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் பயிர் சாகுபடி நடைபெறும் இடங்களில் 81 ஆழ்குழாய் வசதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சில இடங்களில் நீர் இருப்பு இல்லாதது, ஆழ்குழாய் சேதம் உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், மாற்று இடத்தில் புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்படுகிறது. இவ்வாறு 6 இடங்களில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆர்.கே.வி.ஓய். என்கிற திட்டத்தின் நிதியில் இத்திட்டப்பணி நிறைவேற்றப்படுகிறது. ஆழ்குழாய்கள் அமைப்புப் பணிக்கு தலா ரூ.15 லட்சம் செலவாகிறது. ஆழ்குழாய் அமைப்புப் பணி மட்டும் வேளாண் துறையை சேர்ந்தது, பராமரிப்பு பணி பாசிக் நிறுவனத்தைச்சேரும். இருந்தாலும் விவசாயிகள், பராமரிப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும் என்றார்.

Tags : Karaikal ,places ,Thirunallar , Karaikal, agriculture, deep pipe
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...