×

சமூக பொருளாதார இலக்குடன் கம்பெனி செயலாளர்கள் தொழிலை வளர்க்க வேண்டும்: ஜனாதிபதி அறிவுரை

புதுடெல்லி: இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தின் (ஐசிஎஸ்ஐ) 51வது ஆண்டு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இந்த மையத்தில், நாடு முழுவதும் 59 ஆயிரம் உறுப்பினர்களும், 3.5 லட்சம் மாணவர்களும் உள்ளனர். கம்பெனி செகரட்டரீஸ் படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு இந்த மையம் உயர்தர கல்வியை அளித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:கார்ப்பரேட் நிர்வாகம் என்ற கருத்தே சிக்கலானது. ஆனால் இதன் விதிமுறைகள் தெளிவானது. வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, ஒற்றுமை, நாணயம் மற்றும் நேர்மை ஆகியவைதான் இதன் 4 தூண்கள். இந்தியாவை சர்வதேச தொழில் முதலீடுகளுக்கான இடமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்த முயற்சியில் கம்பெனி சட்டங்களை வெளிப்படைத் தன்மையுடன் அமல்படுத்த வேண்டும்.

சில தொழில் நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை தகர்ப்பதை பார்த்திருக்கிறோம். கம்பெனிகள் தடுமாறி ஸ்தம்பிக்கின்றன. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. சமூக பொருளாதார இலக்குடன் தொழிலை வளர்க்கும்போது, லாபத்துக்கும், கொள்ளை லாபத்துக்கும் உள்ள வித்தியாசத்தை பங்குதாரர்கள் புரிந்து கொள்வதை கம்பெனி செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். திறமையான, நியாயமான, கம்பெனி நிர்வாக முறை நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான அம்சம். இதை நிறைவேற்றும் பொறுப்பு கம்பெனி செயலாளர்களுக்கு உண்டு. உங்களின் நியாயம் மற்றும் நேர்மைதான், சமூகத்துக்கான கடமையை தீர்மானிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Company Secretaries ,President , socioeconomic, goal,Business,President
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...