×

ஐஎன்எக்ஸ் வழக்கில் 4 மாஜி அதிகாரிகளிடம் விசாரணை கவலை தெரிவித்து பிரதமருக்கு 71 முன்னாள் அதிகாரிகள் கடிதம்

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நிதியமைச்சகத்தில் பணியாற்றிய முன்னாள் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சிந்து குலார், நிதியமைச்சகத்தின் முன்னாள் இயக்குனர் பிரபோத் சக்சேனா உட்பட முன்னாள் உயர் அதிகாரிகள் 4 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதுபோன்ற காலம் கடந்த நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது என பிரதமர் மோடிக்கு, முன்னாள் அமைச்சரவை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், பஞ்சாப் முன்னாள் டிஜிபி ஜூலியோ ரிபேரியா ஆகியோர் உட்பட ஓய்வு பெற்ற அதிகாரிகள் 71 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:அரசியல் ஆதாயத்துக்காக அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகளை குறிவைத்து நடவடிக்கை எடுப்பது கவலை அளிக்கிறது. விசாரணைக்கு நியாயமான கால அளவு இருக்க வேண்டும். மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின் பழைய கோப்புகளை மீண்டும் திறந்து பார்க்கக் கூடாது. இந்த நடவடிக்கை, சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். கடமையை செய்த உயர் அதிகாரிகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. மத்தியிலும், மாநில அளவிலும் கட்சி பாகுபாடின்றி அனைத்து ஆட்சியாளர்கள் மீது வரம்பு மீறல் குற்றச்சாட்டு உள்ளது. அரசின் கொள்கை முடிவுகளை அமல்படுத்தும் நேர்மையான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது தற்போது பணியில் உள்ள அதிகாரிகளை ஊக்கம் இழக்கச் செய்யும். எந்த ஒரு முக்கிய திட்டத்தையும் செயல்படுத்துவதில் அதிகாரிகளிடம் தயக்கத்தை ஏற்படுத்தும். இப்பிரச்னை ஏற்படாமல் இருக்க சட்ட விதிமுறைகள் வகுப்பட வேண்டும். காலம் கடந்த கோப்புகளை தோண்டி எடுத்து ஆராய அனுமதிக்கப்பட்டால், எந்த அரசிலும் எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Tags : Ex-Officers ,magistrates ,4Maji , 4 magistrates , INX case, Prime Minister,Letter
× RELATED டெல்லியில் கோர்ட் சம்மனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் மனு!!