×

ஆவடியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஆந்திர தம்பதி உத்தரகாண்டில் கைது: 10 மாதத்துக்கு பிறகு போலீசார் நடவடிக்கை

சென்னை: ஆவடியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஆந்திர தம்பதியை உத்தரகாண்டில் போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த சேக்காடு, ஐயப்பன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (67). இவரது 2வது மனைவி விலாசினி (58). இருவரும் சென்னை, தங்கசாலையில் உள்ள அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், ஜெகதீசன் வீட்டில் கடந்த 2018 நவம்பர் 10ம் தேதி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (35), தனது மனைவி லட்சுமியுடன் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். தம்பதி அந்த வீட்டுக்குள்ளேயே தங்கி இருந்தனர். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளான்.நவம்பர் 27ம் தேதி காலை ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி விலாசினி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஆனால் வீட்டில் தங்கியிருந்த ஆந்திர தம்பதி மாயமாகி இருந்தனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த விலாசினியின் கழுத்து, காது, கைகளில் இருந்த நகைகள், வீட்டில் இரண்டு பீரோக்களில் இருந்த  நகைகள் மற்றும் ரொக்க பணமும் கொள்ளை போயிருந்தது. புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தனிப்படை அமைத்து தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தனர்.

விசாரணையில் ஜெகதீசனும், சுரேஷ்குமாரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வந்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட  ஜெகதீசன் மனைவி விலாசினி இருவரிடமும்  தகராறில் ஈடுப்பட்டு உள்ளார். மேலும், அவர் சுரேஷ்குமாரிடம், ‘‘எனது கணவரை போதைக்கு அடிமையாக்குகிறாயா?’’ என கேட்டு அவதூறாக பேசியுள்ளார்.  மேலும் அவர் சுரேஷ்குமாரை வீட்டை காலி செய்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ்குமாரும், அவரது மனைவி லட்சுமியும் சேர்ந்து ஜெகதீசன், மனைவி விலாசினி ஆகியோரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்ததும், பிறகு சுரேஷ்குமார், மனைவி, குழந்தையுடன் ஆவடியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து  ஹவுரா எக்ஸ்பிரஸ் மூலம் கொல்கத்தாவிற்கு தப்பியதும் தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் உத்தரப்பிரதேசம், ஒடிசா, கொல்கத்தா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட  இடங்களில் தேடியும் சுரேஷ்குமார் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுரேஷ்குமார் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர்  காளிராஜ் தலைமையில் போலீசார் ஹரித்வார் சென்றனர். அங்கு சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதன் பிறகு போலீசார் இருவரையும் விமானம் மூலம் நேற்று சென்னை  கொண்டு வந்து ஆவடி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது ஜெகதீசன், அவரது மனைவி விலாசினி இருவரையும் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும், இருவரும் கடந்த 10 மாதங்களில் கொள்ளையடித்த நகை, பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆந்திர போலீசார் தேடியும் பிடிக்க முடியவில்லை. 3 ஆண்டுக்கு மேலாக டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்துள்ளார்.

சொந்த ஊரில் 23 வழக்குகள்ஹரித்துவாரில் வாடகை வீட்டில் மனைவி, மகனுடன் தஞ்சம் ஆவடி தம்பதியை கொலை செய்து விட்டு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கைதான சுரேஷ்குமார் பற்றி பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: கொலையாளி சுரேஷ்குமார் மீது சொந்த ஊரான விசாகப்பட்டினம் பகுதியில் கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு உள்பட 23 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக சுரேஷ்குமாரை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடி உள்ளார். அதன் பிறகு அவரை ஆந்திர மாநில போலீசார் தேடியும் பிடிக்க முடியவில்லை. மேலும், சுரேஷ்குமார் போலீசாருக்கு 3 ஆண்டுக்கு மேலாக டிமிக்கி கொடுத்து  தலைமறைவாக இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் ஆவடியில் ஜெகதீசன் வீட்டில் தங்கி இருந்து மனைவியுடன் வேலை செய்துள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் ஜெகதீசன் தம்பதியை இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் ரயில் மூலம் வட இந்தியாவிற்கு சென்று பல மாநிலங்களில் சுற்றி திரிந்துள்ளனர். சுரேஷ்குமார் தனது செல்போனை தம்பதியை கொலை செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பே அணைத்து வைத்துள்ளார். பின்னர், அவர் செல்லும் இடங்களில் வழிப்போக்கரிடம் இருந்து செல்போனை வாங்கி பெற்றோர், உறவினரிடம் பேசி வந்துள்ளார்.இதனால் அவரை கடந்த 10 மாதங்களாக பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இதையடுத்து பல்வேறு தகவல்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விஜயவாடா, இந்துப்பூர், அனந்தபூர், கொல்கத்தா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களிலும் தேடினார்கள். இறுதியில் அவர் தனது மனைவி லட்சுமி, 4 வயது மகனுடன் ஹரித்துவாரில் வாடகைக்கு வீடு எடுத்து பதுங்கி இருந்ததும், மேலும் அவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரையும், மனைவி லட்சுமியையும் கைது செய்தனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும், சுரேஷ்குமார் வேறு ஏதேனும் குற்றச்செயலில் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Andhra Pradesh ,Uttarakhand , double murder, Andhra Pradesh ,couple ,arrested,Uttarakhand
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...