×

காதலியுடன் குடும்பம் நடத்தும் 70 வயது கணவரை மீட்க போராடிய மூதாட்டி

*சேலம் போலீஸ் ஸ்டேசனில் நெகிழ்ச்சி சம்பவம்

சேலம் : மூதாட்டி ஒருவர் தனது 70 வயது கணவரை அவரது கள்ளக்காதலியிடம் இருந்து மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்குமாறு சேலம் போலீசில் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் களரம்பட்டியை சேர்ந்த 65 வயதான மூதாட்டி சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனது கணவர் அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த 55 வயதான பெண்ணுடன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அவருடன் குடியிருந்து வருகிறார். அவருக்கு புத்திமதிகளை கூறி என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணையை துவங்கினர். மூதாட்டியின் கணவருக்கு வயது 70. அவருடன் குடும்பம் நடத்திவரும் பெண்ணுக்கு வயது 55. அவர்கள் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்தனர். இதையடுத்து இருவரும் ஜோடியாக போலீஸ் ஸ்டேசன் வந்தனர். கணவரை பார்த்ததும் மூதாட்டி கண் கலங்கினார். எப்படியாவது என்னுடன் அவரை சேர்த்து வைத்து விடுங்கள் என அழுகையை அடக்கிக்கொண்டு போலீசாரிடம் கூறினார்.


அதே நேரத்தில் ‘எங்களது திருமண நாளுக்கெல்லாம் உனக்கு பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்தேனே, எனது வாழ்க்கையிலேயே கை வைத்து விட்டாயே?’ என அந்த பெண்ணை பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்டார். அப்போது அவர்கள் இருவரும் வாய் ஏதும் பேசாமல் மவுனமாக நின்றிருந்தனர்.

70 வயது முதியவர் போலீசாரிடம் கூறும்போது, ‘என்னுடைய மகன்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். நான் வசதியுடன்தான் இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக நல்ல சாப்பாடு இல்லை. எந்த மகிழ்ச்சியும் எனக்கு இல்லை. இந்நிலையில் தான் எனது அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த இப்பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரது அன்பு, அரவணைப்பு எனக்கு ஆறுதலாக இருந்தது. 10 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம். என்னை இப்பெண்ணிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்’ என்று கெஞ்சினார்.

முதியவருடன் வந்த அப்பெண் கணவரை இழந்தவர். அவர், என்ன சொல்வது என தெரியாமல் தவித்தபடி நின்றிருந்தார். ஆனால் மூதாட்டியோ, எனது கணவர் எனக்கு வேண்டும் என விடாபிடியாக கேட்டபடி இருந்தார்.
இதையடுத்து முதியவருக்கு போலீசார் அறிவுரை கூறினர். ‘வயதான காலத்தில் தவறான பாதைக்கு சென்றால், மகன், பேரப்பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். ஊர் தவறாக பேசும். உங்களது மனைவியின் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தால் நீங்கள் சிறைக்குத்தான் செல்வீர்கள்’ என்றனர்.

நீண்ட நேர அறிவுரையை ஏற்றுக்கொண்ட முதியவர், பின்னர் மனைவியுடன் செல்வதாக கூறினார். இதனால் மகிழ்ச்சியடைந்த மூதாட்டி இன்று இரவுக்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்’ என உத்தரவிட்டு விட்டு  போலீசாருக்கு கையெடுத்து கும்பிட்டபடி நன்றி தெரிவித்து வீட்டிற்கு புறப்பட்டார்.  அப்போது அங்கிருந்த போலீசார் அனைவருக்கும் இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்த முதியவர், ‘உங்களது சட்டப்படி நான் வீட்டிற்கு செல்கிறேன். ஆனால் நான் வாழப்போவது எனது மனம் கவர்ந்த இவளுடன்தான். என்னை மன்னித்து விடுங்கள்’ என தனது காதலியுடன் சென்றார். அவர் அப்படி கூறிவிட்டு சென்றது போலீசாரையே ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.

Tags : police station ,Godmother ,Near Salem A Women Protest , Godmother,slem, police station,women, protest
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...