இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் 6 ரயில் நிலையங்கள்: பெருங்களத்தூர் முதலிடம்!

புதுடெல்லி: இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகத்தின் 6 ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. தூய்மையான ரயில் நிலையங்களில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை ராஜஸ்தான் மாநிலம் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள 720 ரயில் நிலையங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டிலேயே மிகவும் தூய்மையாக உள்ள பத்து ரயில் நிலையங்களின் பட்டியலையும், மிகவும் அசுத்தமாக உள்ள 10 ரயில் நிலையங்களின் பெயர்களையும் இந்திய ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி சுத்தமான ரயில் நிலையங்களில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பப்பூர் ரயில் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே மாநிலத்தின் ஜோத்பூர் மற்றும் துர்காபுரா ரயில் நிலையங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை கைப்பற்றியுள்ளன.

ஜம்முதாவி ரயில் நிலையம் 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் காந்திநகர் ஜே.பி மற்றும் சூரத்கர் ரயில் நிலையங்கள் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை பிடித்துள்ளன. விஜயவாடா ரயில் நிலையத்திற்கு 7வது இடம் கிடைத்துள்ளது. ராஜஸ்தானின் உதய்பூர் சிட்டி மற்றும் அஜ்மீர் ரயில் நிலையங்கள் முறையே 8 மற்றும் 9வது இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் ஹரித்துவார் ரயில் நிலையம் 10வது இடம் வகிக்கிறது. மொத்தம் டாப் 10 தூய்மையான ரயில் நிலைய பட்டியலில் ராஜஸ்தானில் மட்டும் 7 நிலையங்கள் இடம்பிடித்துள்ளன. இதேபோல் வெளியிடப்பட்டுள்ள டாப் 10 அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில், சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது.

சென்னை கிண்டி ரயில் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், டெல்லி சடார் பஜார் ரயில் நிலையம் 3வது இடத்தில் உள்ளது. சென்னை வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய ரயில் நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. கேரளாவில் ஒட்டப்பாலம் ரயில் நிலையம், 7வது இடம் வகிக்கிறது. சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையம் 8வது இடத்தை பிடித்துள்ள நிலையில், 9வது இடத்தில் பீகாரின் அராரியா கோர்ட் நிலையம் உள்ளது. இந்த பட்டியலி்ல உத்தரப்பிரதேசத்தின் குர்ஜா ரயில் நிலையம் 10வது இடத்தை பெற்றுள்ளது. மொத்தத்தில் டாப் 10 அசுத்தமான ரயில் நிலையங்களில் 6 ரயில் நிலையங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>