×

ஆயுதபூஜை தொடர் விடுமுறை அரசு பஸ்களில் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையின் காரணமாக அரசு பஸ்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர். .   சென்னையில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். மேலும், மாணவர்கள் இங்கு தங்கி, தங்கள் மேல்படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏராளமானோர் சென்னையில், அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர்.
வரும் 7ம் தேதி ஆயுத பூஜை வருகிறது. இதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறாக உள்ளது. இதனால் தொடர் விடுமுறையாக உள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் தங்கியுள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று, விடுமுறையை கழிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே, நேற்று இரவு பயணிக்கும் வகையில் ரயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் விடுமுறைக்கு முன்னரும், பின்னரும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. இதுபோல, அரசு மற்றும் தனியார் பஸ்களில் பலர் முன்பதிவு செய்தனர். .. இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ேநற்று வழக்கமாக இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகள் 930 என மொத்தம் 3,155 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்ததாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் சேரத்து 765 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2,990 பஸ்கள் இயக்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கும் மொத்தமாக சேர்த்து வழக்கமாக இயக்கப்படும் 4,450 பஸ்களுடன் சேர்த்து 1,695 பஸ்கள் என மொத்தம் 6,145 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிகப்படியான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தல்லி, தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், தாம்பரம் மாநகர் போக்குவரத்துக்கழக ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், கே.கே.நகர் பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கனரக வாகனங்கள் சிட்டிக்குள் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாறாக அவை பைபாஸ் சாலையில் இயக்கப்படுகின்றன. பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பஸ் ஸ்டாண்டுகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். அவர்கள் சந்தேகப்படும் வகையில் சுற்றுவோரிடம் விசாரணை நடத்தினர். பயணிகளிடத்தில் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

Tags : hometowns , Arms, holidays, government buses, trains
× RELATED திருமங்கலம், மேலூரிலிருந்து 2ம்...