×

சென்னை மாநகராட்சியில் 57,97,652 வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கானவாக்காளர் பட்டியல் வெளியீடு: தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக மாநகராட்சி இணை ஆணையர் லலிதா அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான சென்னை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 57,97,652 ஆக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக மாநகராட்சி இணை ஆணையர் (கமிஷனர் பொறுப்பு) லலிதா தெரிவித்தார்.  தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிகாலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக முதல்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

 வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தற்போது வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  அதன்படி, உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதன்தொடர்ச்சியாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.   சென்னை மாநகராட்சியில், சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) லலிதா, ரிப்பன் மாளிகையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு மாநகராட்சி ஆணையர் லலிதா (பொறுப்பு) நிருபர்களிடம் கூறியதாவது:  சென்னை மாநகராட்சியில் இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலானது, சென்னை மாநகராட்சி தலைமையிடம், 1 முதல் 15 வரை உள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் பட்டியல்தான் இது. அதை சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு ஏற்றவாறு அமைத்துள்ளோம்.
 எனவே இந்த பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு, பெயர்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர் குறித்த விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா, பெயர்கள் எதுவும் விடுபட்டுள்ளதா என்பது குறித்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதில் திருத்தம் மற்றும் சேர்த்தல் இருந்தால் சரி செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை, வாக்காளர்களின் பெயர், எந்த பகுதியில் உள்ளது, அவர்களுக்கான வாக்குச்சாவடி எங்கே உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சிக்கு நடைபெற உள்ள சாதாரண உள்ளாட்சி தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியலும் தாயாரிக்கப்பட்டுள்ளது. இதில், ஆண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கும் 5,558 என மொத்தம் 5,714 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  சென்னை மாநகராட்சி வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை மொத்தமாக வாக்காளர்கள் எண்ணிக்கை 57,97,652 ஆக உள்ளது. இதில், குறைந்தபட்சமாக மண்டலம் 12ல் உள்ள 159வது வார்டில் 2,921 வாக்காளர்களும், அதிகபட்சமாக மண்டலம் 10ல் 137வது வார்டில் 54,801 வாக்காளர்களும் உள்ளனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் திருத்தம் நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக அதனுடன் சேர்த்து வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

உள்ளாட்சி தேர்தலுக்காக கர்நாடகம், பீகார் மாநிலங்களில் இருந்து 43,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, மண்டலம் 2ல் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி உள்ளாட்சி தேரத்லை எதிர்கொள்ள தயாராக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.  இந்த பட்டியல் வெளியீட்டின் போது, திமுக சார்பில் மதன்மோகன், மருதுகணேஷ், பொன்ரங்கம், ஏழுமலை, அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேல், தேமுதிக சார்பில் மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.ஏழுமலை, காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.நவாஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



Tags : voters ,corporation ,release ,Chennai ,Chennai Corporation ,Lalitha , Chennai Corporation, Voters, Local Elections, Voter List, Corporation Lalitha
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...