×

12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது : துரைப்பாக்கத்தில் பரபரப்பு

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டல நல அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் துப்புரவு அலுவலர் பொன் முருகன், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய மாநகராட்சி அதிகாரிகள் 198வது வார்டு சோழிங்கநல்லூர் காந்தி நகரில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காந்தி நகரை சேர்ந்த ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறினார். அவரிடம் மருத்துவம் பார்த்த மருத்துவமனையின் சீட்டை காண்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘‘எனக்கு மருத்துவம் பார்த்த கிளினிக்கில் சீட்டு எதுவும் தரவில்லை. குளுக்கோஸ் ஏற்றி, மாத்திரை மட்டும் வழங்கினர்’’ என்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது கண்ணியப்பன் (37) என்பவரது வீட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிகாஷ் சுக்கியா (19) என்ற வாலிபருக்கு குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் மருத்துவர் என கூறி அங்கு வந்த கண்ணியப்பனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கண்ணியப்பன் அவருடைய நண்பர் பெயரில் மெடிக்கல் வைத்து, அதற்கான உரிமத்தை தனது பெயரில் பெற்றுள்ளதும், மெடிக்கலுக்கு உடல் நலக்குறைவு என்று வரும் மக்களிடம், ‘‘நான் மருத்துவர்’’ என கூறி அவரது வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து போலி மருத்துவர் கண்ணியப்பனை மாநகராட்சி அதிகாரிகள் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்து மீது புகாரளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணியப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : doctor , Fake doctor arrested , studying ,class 12
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...