×

சீரமைக்காததை கண்டித்து சாலையில் தேங்கிய மழைநீரில் நீச்சலடித்து நூதன போராட்டம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து சாலையில் தேங்கிய மழை நீரில் நீச்சலடித்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூரிலிருந்து கீழநம்மங்குறிச்சி சிரமேல்குடி இணைப்புச்சாலை போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களாக பெய்த தொடர்மழையால் சாலை மேலும் மோசமானது. சாலை நெடுக பள்ளங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், முத்துப்பேட்டை மற்றும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து புகாரளித்தும் அதிகாரிகள் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நேற்று மாலை சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் படுத்து நீச்சலடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடந்த நீச்சல் போராட்டத்தில் ஆகாஷ், கீர்த்திவாசன், அபிஷேக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மீனாட்சிசுந்தரம் கூறுகையில், கீழநம்மங்குறிச்சி இணைப்புசாலை நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கையில்லை, இதையடுத்து சாலையில் தேங்கிக்கிடக்கும் மழைநீரில் நீச்சல் போட்டி நடத்தி நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இதையறிந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்ப
தாக தெரிவித்துள்ளனர் என்றனர்.

Tags : Swimming , Road, stagnant rain water, swimming, modern struggle
× RELATED தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி வீரர், வீராங்கனைகள் 3 பேர் சாதனை