×

கொல்கத்தாவில் 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரட்டை தேங்காய் காய்க்கும் மரத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரட்டை தேங்காய் காய்க்கும் தென்னை மரத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள செய்ஷல்ஸ் பகுதியில் மட்டுமே அதிகம் காணப்படும் இரட்டை தேங்காய் காய்க்கும் மரம் ஒன்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஹவுராவில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஸ் சந்திரபோஸ் என்ற தாவிரவியல் பூங்காவில் நடப்பட்டது. சுமார் 1200 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து, இரட்டை தேங்காய்களை காய்க்க செய்யும் இவ்வகை மரம், இந்திய விடுதலைக்கு பின்னரும் அதே இடத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பராமரிப்பாளர்களின் தீவிர முயற்சி காரணமாக மரம் அதன் 94வது வயதில் முதல் முறையாக பூக்களை பூக்கத் தொடங்கியது. மரத்தை பெண் மரம் என்று அறிந்துகொண்ட பூங்கா நிர்வாகிகள் செயற்கை மகரந்த சேர்க்கைக்காக கடந்த 2006ம் ஆண்டு இலங்கையில் உள்ள இவ்வகை ஆண் மரத்தில் இருந்து மகரந்தம் கொண்டு வந்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றதை அடுத்து, கடந்த 2013ம் ஆண்டு தாய்லாந்தில் வளரும் இவ்வகை மரத்தில் இருந்து மகரந்தம் கொண்டுவரப்பட்டு செயற்கை மகரந்த சேர்க்கை நடைபெற்றது.

இதன் பயனாக இந்த மரம் காய்களை காய்க்க தொடங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரட்டை தேங்காய் மரம் காய்களை காய்ப்பதை நிறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது புதிது புதிதாக தென்னங்கீற்று ஓலைகளும் உருவாவது நிறுத்தப்பட்டு, ஏற்கனவே மரத்திலிருந்த ஓலைகள் பழுப்பு நிறத்திற்கு மாறி வருகின்றன. இந்தியாவில் இந்த ஒரு மரம் மட்டுமே இருப்பதால் இம்மரத்தை பாதுகாக்க போராடும் விஞ்ஞானிகள் செயற்கை முறையில் மரத்தில் காய்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Tags : Researchers ,Kolkata , Kolkata, 125 year old, old, double coconut tree, trying to preserve, researchers intensity
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...