×

பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்குவோர் கலக்கம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,088க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.3,636க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது.

இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்கள் வரும் பண்டிகைகாலம் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து விலையும்  அதிகரித்துள்ளது.இதன் எதிரொலியாக சென்னையில் நேற்று  கிராமுக்கு 50 ரூபாய் ஏற்றம் கண்டு, சவரனுக்கு 28,848 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,088க்கு விற்பனையாகி வருகிறது.அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.49.40க்கும், கிலோ ரூ.49,400க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Tags : season ,jewelry buyers , Jewelry Gold, Shaving, Price, Sale, Silver
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு