×

ஓட்டை, உடைசல் அரசு பஸ்கள் இயக்கம்: பயணிகள் பரிதவிப்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் வழித்தடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டை, உடைசலான நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இவ்வழித்தடத்தில் புதிய பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல்- கரூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை உள்ளது. இவ்வழித்தடத்தில் 10 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல் குஜிலியம்பாறையில் இருந்து வேடசந்தூர், ஆர்.வெள்ளோடு, லந்தக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் 3 நகர பேருந்துகள் என 13 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவ்வழித்தடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டை, உடைசலான நிலையிலேயே உள்ள அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பஸ்சின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்துள்ளதால் மழை பெய்யும் நாட்களில் இதில் பயணம் செய்யும் பயணிகள் மழையில் நனைந்தவாறே செல்லும் நிலை உள்ளது. மேலும் மேற்கூரை எப்போது விழும் என்ற அச்சத்தில் பயணிகள் பயணம் செய்கின்றனர். பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் மிகவும் பழுதடைந்து மூடிய நிலையில் திறக்க முடியாமல் உள்ளது. இதனால் பகல் நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள் காற்றோட்டம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ்கள் அடிக்கடி ரிப்பேர் ஆகி இடையிலேயே நின்று விடுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து காலை நேரங்களில் கரூர் நகருக்கு டெக்ஸ் வேலைக்கு ஆண்களும், பெண்களும் சென்று வருகின்றனர். இதேபோல் கொத்தனார், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட வேலைக்கும் பலர் சென்று வருகின்றனர். இதுமட்டுமின்றி பொதுமக்கள், அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் காலை நேரங்களில் அரசு பஸ்சில் பயணம் செல்கின்றனர். இதனால் இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து கூடுதல் வருவாய் ஈட்டி தருகின்றது. எனினும் இவ்வழித்தடத்தில் அரசு பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. தமிழகம் முழுவதும் மோசமான நிலையில் இயங்கி வரும் அரசு பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இவ்வழித்தடத்தில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டை, உடைசலான அரசு பேருந்துகள் இயக்கப்படுவது இப்பகுதி ஏமாற்றம் அடைய செய்கிறது. எனவே இவ்வழித்தடத்தில் ஓட்டை, உடைசலான இயக்கப்படும் அரசு பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்தை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : breakdown , State Bus
× RELATED ‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவு காதலர்களின் தற்காலிக பிரிவு’