×

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்.9ல் காலவரையற்ற போராட்டம்: டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 9ம் தேதி காலவரையற்ற போராட்டத்தை தொடங்குவோம் என்று டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். நாடு முழுவதும் 10 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். அவர்களில் 18,125 பேர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ‘‘அரசாணை 354ன் படி 2017ம்  ஆண்டு வழங்க ேவண்டிய கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்கவில்லை. கடந்த ஆண்டு 800 அரசு மருத்துவர்கள் இடங்கள் பணி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால்  டாக்டர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பு முடித்ததும் வெவ்வேறு ஊர்களில் பணி வழங்கும் நடைமுறையை கைவிட வேண்டும். முதுநிலை நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவ கல்லூரி  பயிற்சி மருத்துவர்களின் 50 சதவீத இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை திரும்ப அளிக்க வேண்டும்’’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 4 டாக்டர்கள் சங்கங்கள் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆகஸ்ட் மாதத்தில் சில நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து  போராட்டம் நடத்தினர். ஆனால் அரசுத்தரப்பில் அதை  கண்டுகொள்ளாததால், ஆகஸ்ட் 24ம் தேதி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். ஆகஸ்ட் 27ம் தேதி, உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில்  ஈடுபட்டனர்.அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் குழுவினர் டாக்டர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் அன்று மாலையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 6 வாரங்களுக்குள் அனைத்து  கோரிக்கை நிறைவேற்றுவதாக அரசுத்தரப்பில் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை கோரிக்களை நிறைவேற்றாததால், டாக்டர்கள் தலைமை செயலகத்தில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளரை சந்தித்து பேசினர். இந்நிலையில்  கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உறுதியளிக்கவில்லை. இந்நிலையில் 6 வார காலக்கெடு அக். 8ம் தேதியுடன் முடிகிறது. அதுவரை சுகாதாரத்துறை தரப்பில் கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில், 9ம் தேதி கூட்டமைப்பின்  நிர்வாகிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் பேராட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.




Tags : Doctors Consortium Announcement ,Doctors Consortium Announcements , demands , indefinite ,struggle ,Doctors ,announces
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...