×

6ஆயிரம் கோடியில் கண்டலேறு அணையில் இருந்து பைப்லைன் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது எப்படி?: தனியார் நிறுவனம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க திட்டம்

சென்னை: 6 ஆயிரம் கோடியில் கண்டலேறு அணையில் இருந்து பைப்லைன் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம்  ஒப்படைக்கப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து 152 கி.மீ தூரமும், தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கி.மீ தூரமும் கால்வாய் கடந்த 1995ல் அமைக்கப்பட்டது. கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்த கால்வாய் மூலம் கிருஷ்ணா  நீர் திறந்து விடப்பட்டது. அதே நேரத்தில், தமிழகத்துக்கு கண்டலேறு அணையில் 2 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் கூட முழு நீரும் தமிழகத்துக்கு வருவதில்லை. அதற்கு ஆந்திரா எல்ைலயோர கால்வாய்களில் விவசாயிகள் மோட்டார் பம்ப்  மூலம் தண்ணீரை உறிஞ்சி பயன்படுத்துவதே முக்கிய காரணம்.  கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் முழு நீரையும் தமிழகத்துக்கு ெகாண்டு வருவதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து சமீபத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் முதற்கட்ட அறிக்கை தயாரிக்கும்  பணியில் ஈடுபட்டனர். அதன்படி கண்டலேறு அணையில் இருந்து 10 அடி கொண்ட 6 ராட்சத பைப் மூலம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் ெகாண்டு வரும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைப் மூலம் ஆயிரம் கன அடி வரை  தண்ணீர் கொண்டு வர முடியும். இதற்காக, ரூ.6 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று அந்த முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம்  ஒப்படைக்கப்படுகிறது. அந்த நிறுவனம் சார்பில் கண்டலேறு அணையில் இருந்து எந்த வழியாக பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வரலாம் என்பது தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும் போது, ‘தற்போது கண்டலேறு அணையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் 130 கி.மீ வரை ஆந்திர மாநில விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் தரப்படுகிறது. எனவே, கால்வாயில் குழாய் அமைக்க  முடியாது. அதனால்தான் மாற்று இடத்தில் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து பைப் லைன் அமையவுள்ள பகுதிகள் மலை பகுதிகளாக உள்ளது. அந்த பகுதிகளில் பாறைகளாக தான் இருக்கும்.  இவ்வளவு பெரிய ராட்சத குழாய் அந்த பகுதிகளில் அமைத்து கொண்டு வர முடியுமா என்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போதுதான் தெரிய வரும். இந்த பணிக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்படும். அவர்கள்  தராவிட்டால் உலக வங்கி அல்லது நபார்டு வங்கி கடனுதவி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார். பைப் லைன் அமையவுள்ள பகுதிகள் பாறைகள் உள்ள பகுதியாக உள்ளன.  ராட்சத குழாய்களை அப்பகுதியில் அமைக்க முடியுமா என்பது திட்ட அறிக்கை தயாரிக்கும்போதுதான் தெரிய வரும்.

Tags : dam ,Madras ,Kandalur , 6000 crores ,continental dam,Chennai , Private Company
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...