×

திருப்பூர், பொள்ளாச்சியில் 2,222 கிலோ கலப்பட டீத்தூள் சிக்கியது

திருப்பூர்: திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,222 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு, குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் கலப்பட உணவு பொருட்கள் விற்பனை தடுக்க அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் காங்கயம் கிராஸ்ரோடு, குமாரசாமி முதல் தெருவில் வேன் ஒன்றில், கலப்பட டீத்தூள் கொண்டு செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அதிகாரிகள் குழு, அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி, ஆய்வு செய்தபோது அதில் கலப்பட டீத்தூள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வேன் டிவைரிடம் நடத்திய விசாரணையில், அதே தெருவில் உள்ள ஒரு குடோனில் கலப்பட டீத்தூளை இறக்குவதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார். குடோனில், அதிகாரிகள் சோதனை செய்தபோது, சுமார் 360 கிலோ சாயம் ஏற்றப்பட்ட கலப்பட டீ தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, குடோனில் இறக்குவதற்காக வேனில் கொண்டு வரப்பட்ட 1,150 கிலோ கலப்பட டீத்தூள் உட்பட 1,510 கிலோ கலப்பட டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்ததோடு, டீத்தூளை ஏற்றி வந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி: இதுபோல் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் இருந்து குமரன் நகருக்கு செல்லும் வழியில் உள்ள அன்பு நகரில் எந்த உரிமமும் இல்லாமல் டீத்தூள் குடோன் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வபாண்டியன், சுப்புராஜ், காளிமுத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று, அங்குள்ள குடோனில் சோதனை செய்தனர். அப்போது எந்த அனுமதியின்றியும், உரிமம் இல்லாமலும் ஏலம் மூலம் டீத்தூள் வாங்கி வந்து, குடோனில் பதுக்கியது தெரியவந்தது. அங்கு அதிகாரிகள் நடத்திய சோதனையில், சாக்குமூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 712 கிலோ டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த டீத்தூள் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி டீத்தூள் குடோன் நடத்தி வந்த செங்குட்டுவன் வீதியை சேர்ந்த ஆனந்த்(30) என்பரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags : Pollachi ,Tirupur ,Tiruppur , Tea powder, Tiruppur, Pollachi
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!