×

கல்லூரி மாணவி மாயமான விவகாரத்தில் பரபரப்பு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைப்பு

தென்தாமரைக்குளம்: தென்தாமரைக்குளம் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக ஆத்திரத்தில் வாலிபரின் வீடு மீது பெட்ரோல் நிரப்பிய பிளாஸ்டிக் கவரை வீசி தீ வைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிர் தப்பினார். குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே உள்ள தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் ஹரிகர சுதன் (23). இவர், கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவிக்கு 17 வயதே ஆகிறது. சம்பவத்தன்று அந்த மாணவியுடன் ஹரிகர சுதன் மாயம் ஆனார். அவர் மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்ததும் மாணவியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். இது சம்பந்தமாக கடந்த 30ம் தேதி மாணவியின் உறவினர்கள், தேரிவிளையில் உள்ள ஹரிகர சுதன் வீட்டுக்கு வந்து, அவரை பற்றி விசாரித்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் வந்தால், உடனடியாக காவல் நிலையத்துக்கு அழைத்து வருகிறோம் என கூறி உள்ளனர். இந்த நிலையில் நேற்று (1ம்தேதி) இரவு 4 பேர் கொண்ட கும்பல் மீண்டும் ஹரிகர சுதன் வீட்டுக்கு வந்தனர்.

வீட்டில் அவரின் தாயார் ராஜலெட்சுமி (55) மட்டும் இருந்தார். அவரிடம் உனது மகனை பலமுறை எச்சரித்தும் அவன் கேட்க வில்லை. எங்கள் குடும்ப பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டான். அவனை உயிரோடு விட மாட்டோம் என மிரட்டினர். அப்போது ராஜலெட்சுமி, நாங்களும் எனது மகனை தேடி கொண்டு இருக்கிறோம் என கூறி உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது இந்த கும்பல் ஏற்கனவே பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி வைத்து இருந்தனர். திடீரென அதை ராஜலெட்சுமியின் வீடு மீது எரிந்து, தீ பந்தத்தால் தீ வைத்தனர். இதில் ராஜலெட்சுமியின் சேலையில் தீ பிடித்தது. உங்களை உயிரோடு கொளுத்தி விடுவோம் என அரிவாளை காட்டி மிரட்டி விட்டு கும்பல் தப்பியது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். ராஜலெட்சுமியின் சேலையில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வீட்டின் கதவு எரிந்து நாசம் ஆனது.

இது குறித்து தென்தாமரைக்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜலெட்சுமி அளித்த புகாரின் பேரில், தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்த சுதன் (19), மாதவபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ், தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்த வினோத், கன்னியாகுமரி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த சுதன் (23) ஆகியோர் மீது ெகாலை முயற்சி உள்பட மொத்தம் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சுதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. காதல் விவகாரத்தில் வீட்டின் மீது பெட்ரோல் வீசி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடத்தல் வழக்கு பதிவு

இதற்கிடையே மாணவி மாயமான விவகாரம் தொடர்பாக அவரது தாயார், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மகளை, தேரிவிளையை சேர்ந்த சுப்பையா மகன் சுதன் கடத்தி சென்றதாக கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சுதன் மீது 17 வயது மாணவியை கடத்தி சென்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுதன் ஜேசிபி டிரைவர் ஆவார்.

Tags : College student , Petrol bomb
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது