×

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு ராகுலை களம் இறக்க கே.எஸ்.அழகிரி திட்டம்: மேலிட தலைவர்களையும் அழைக்க முடிவு

சென்னை: காங்கிரசுக்கு சவாலாக விளங்கும் நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற ராகுல்காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்களை பிரசாரத்துக்கு அழைக்க கே.எஸ்.அழகிரி திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல்  வெளியாகியுள்ளது.  நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் அத்தொகுதியை கைப்பற்றியாக வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன்  நிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே வசந்தக்குமார் எம்எல்ஏவாக பதவி வகித்த தொகுதி என்பதால் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சென்று வாக்குகளை பெறவும் திட்டமிட்டுள்ளனர். எனவே, நாங்குநேரி தொகுதியில் அதிமுகவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளதால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் புதுமுகம் என்றாலும் கூட தென்மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தொகுதி மக்கள் மத்தியில் அவர் அறிமுகமாவதில் சிக்கல் ஒன்றும் இல்லை. அதேநேரம் ஆளுங்கட்சிக்கு ஈடு கொடுக்கும்  வகையில் பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தென்மாவட்ட அமைச்சர்கள் நாங்குநேரி தொகுதியில் ‘டேரா’ போட்டு இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 எனவே, இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பெரும்பாலான தலைவர்கள் காங்கிரஸ் மேலிட தலைவர்களையும் பிரசாரத்துக்கு  அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராகுல்காந்தி தனது எம்பி தொகுதியான வயநாடு வந்து செல்வதால், அவரை நாங்குநேரி தொகுதிக்கும் பிரசாரத்துக்கு அழைத்தால் வெற்றி வாய்ப்பை பெறலாம் என்ற கருத்தை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்  கே.எஸ்.அழகிரியிடம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் தெரிவித்து, கட்சியினரின் இந்த கருத்து சாத்தியப்படுமா? ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்கலாமா? என்பது குறித்தும்  கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  எனவே, நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் பிரசாரம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : KS Alagiri ,elections ,Nanguneri ,By-Election ,Nunguneri , Nunguneri ,by-election ,campaign,Rahula ,
× RELATED +2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி...