×

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்ற உத்தரவை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தற்போது நீதிமன்ற காவலில்  திகார் சிறையில் இருக்கிறார். இதையடுத்து அவர் வரும் 3ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் சிபிஐயின் கைது நடவடிக்கைக்கு எதிராக ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 5 நாட்களாக விசாரிக்கப்பட்டது.  ப.சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜியை ப.சிதம்பரம் ஒருபோதும் சந்தித்தது கிடையாது.

இதுகுறித்து  அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். மகளையே கொலை செய்தவரின் வாக்குமூலத்தை எப்படி ஏற்பது?’’ என்று வாதிட்டார்.  இதையடுத்து சி.பி.ஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், “இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தால் பல லட்சம் வழங்கப்பட்டதற்கான  ஆதாரங்கள் உள்ளது. ஆனால் அதனை அடிப்படையாக கொண்டு விசாரித்தபோது ப.சிதம்பரம் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் இந்த வழக்கை பொருத்தமட்டில் இவரே முக்கிய நபர் என்பதால் தான் முன்னதாக நீதிமன்றத்தின் தரப்பில் முன்ஜாமீன்  மறுக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற காவலில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு   ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்று வாதிட்டார்.இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 27ம் தேதி நீதிமன்றம்  ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், “ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் முன்னாள் நிதியமைச்சர் மற்றும்  தற்போதைய எம்பி என்பதை அடிப்படையாக கொண்டு அவருக்கு எந்த தனி சலுகைகளையும் நீதிமன்றத்தால் வழங்க முடியாது. இதில் அவர் வெளியே இருந்தால் வழக்கு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும்  அழிக்கக்கூடும் என்ற சிபிஐ தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதனால் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க முடியாது’’ என தெரிவித்த நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரிகை:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்து குல்லார், சிறு, குறு நிறுவனங்கள் துறை செயலாளரான அனூப் கே புஜாரி, நிதித்துறை அமைச்சகத்தின் முன்னாள்  இயக்குனர் பிரபோத் சக்ஸ்சேனா மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை முன்னாள் செயலாளர் ரவீந்திர பிரசாத் ஆகியோர் மீது சிபிஐ அடுத்த ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.

பதற்றத்தில் கார்த்தி:
ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கும்போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் பதற்றத்துடன் யாரிடமும் பேசாமல் நீதிமன்ற வளாகத்தில் அமைதியாக  இருந்தார். ஜாமீன் மனு தள்ளுபடி என்ற தீர்ப்பு வந்தவுடன் கண்ணீருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Tags : Delhi High Court ,Ku ,P Chidambaram , INX Media Abuse, Ku P Chidambaram, Denial of Bail, Delhi High Court
× RELATED 70,772 கிலோ ஹெராயின் மாயம்; ஒன்றிய உள்துறை...