மதுரை: திருவாவடுதுறை ஆதீன மட சொத்துக்களை மீட்கக்கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், சின்ன உலகாணியைச் சேர்ந்த மயில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்கள் பல இடங்களில் உள்ளன. மதுரை மாவட்டம், சின்ன உலகாணியிலுள்ள சில நிலங்களில் குத்தகை அடிப்படையில் சிலர் விவசாயம் செய்கின்றனர். தற்போது குத்தகைதாரர்களின் வாரிசுகள் விவசாயம் செய்கின்றனர். இது குத்தகை விதிக்கு எதிரானது. இவர்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்கவும், இதுவரை உபயோகப்படுத்தியதற்கான தொகையை வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் மனு குறித்து, அறநிலையத்துறை இணை ஆணையர், மதுரை கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நவ. 12க்கு தள்ளி வைத்தனர்.