×

அறந்தாங்கி பகுதியில் உடல் சூட்டை தணிக்கும் நத்தை விற்பனை அமோகம்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் மிக்க நத்தை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பழங்காலத்தில் கிராமங்களில் மக்கள் பயன்படுத்திய உணவு பொருள்கள் பலவற்றையும், நகரங்களில் குடிபெயர்ந்த மக்கள் நிறுத்தியதன் விளைவாக இன்று பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் செயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட உணவுப் பொருள்களை உண்பதாலும், கறிக்கோழி போன்ற இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் உயிரினங்களின் மாமிசங்களை உண்பதாலும், இன்று சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நோய்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது மீண்டும் பழங்கால உணவு முறைக்கு தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டு ரக அரிசி, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், நாட்டுக்கோழி, மீன்களின் இறைச்சிகளை உண்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல உடல்சூட்டை தணிக்கும், மூல நோயை குணமாக்கும் நத்தைகளையும் மக்கள் தேடிச் சென்று வாங்கி சமைத்து உண்ண தொடங்கி உள்ளனர். அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் எரிச்சி ஒத்தக்கடையில் கடந்த சில ஆண்டுகளாக நத்தை வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. நீர்நிலைகளில் ஒதுங்கிக்கிடக்கும் நத்தைகளை சேகரித்து வரும் வியாபாரிகள், அவற்றை சுத்தம் செய்து, பைகளில் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். சுமார் 50 நத்தைகளை கொண்ட ஒரு பையின் விலை ரூ.100 வரை விற்பனை ஆகிறது.

இதுகுறித்து எரிச்சி ஒத்தக்கடையில் நத்தை வியாபாரம் செய்பவர்கள் கூறியது: உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் ஆற்றல் நத்தைக்கு உள்ளது. மேலும் மூல நோய்க்கு அருமருந்தாகவும் நத்தை உள்ளது. நாங்கள் நீர்நிலைகளில் ஒதுங்கும் நத்தைகளை அதிகாலை வேலையில் சேகரித்து எடுத்து வந்து விற்பனை செய்கிறோம். காவிரிபாசன பகுதி ஏரிகளுக்கு தற்போது தண்ணீர் வருவதால், நாகுடி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு சென்று நத்தைகளை சேகரித்து வருகிறோம். தற்போது அதிக அளவு நத்தை கிடைக்கிறது. மற்ற காலங்களில் குறைந்த அளவே நத்தை கிடைக்கும். 50 நத்தைகள் கொண்ட ஒரு பை ரூ.100க்கு விற்பனை செய்கிறோம். நத்தையை வாங்கி சென்று, அதன் ஓட்டை நீக்கி, உள்ளே இருக்கும் சதையை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகின்றன. இதனால் மூல நோய் உள்ளவர்களும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களும் அதிக அளவில் நத்தைகளை வாங்கிச் செல்கின்றனர். மக்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் நத்தைகளை நாங்கள் விற்பனை செய்வதால் எங்களுக்கு மனநிறைவு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நத்தை வாங்கிய அறந்தாங்கியை சேர்ந்த சரவணன் கூறியது: புதுக்கோட்டை சென்று திரும்பும் வழியில் நத்தை விற்பனை செய்வதை பார்த்து அவற்றை வாங்கி செல்வேன். நத்தை உண்பதால், உடலின் ஏற்படும் சூடு குறைவதோடு, உடலும் நல்ல ஆரோக்கியத்தோடு உள்ளது. இயற்கையாக கிடைக்கும் நத்தையின் இறைச்சி ருசியாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். நத்தையின் மருத்துவ குணம் தெரியாமல் சிலர் நத்தை வியாபாரம் செய்யப்படுவதை நக்கல் செய்தபோதிலும், அதில் உள்ள மருத்துவக்குணம் தெரிந்ததால், தொடர்ந்து விற்பனை செய்து வரும் நத்தை வியாபாரிகளுக்கு நத்தை வியாபாரம் மூலம் போதிய வருமானம் கிடைப்பதால் அவர்கள் தொடர்ந்து நத்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Snail sale ,Aranthangi , Aranthangi, snail
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு