×

தேக்கடி படகு விபத்து 10வது நினைவுநாள் இன்று: அலட்சியத்தின் விலை... 45 உயிர்கள்

கூடலூர்: சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, டைகர்வியூ, நேச்சர்வாக், பார்டர்வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், படகுச்சவாரி செய்யவே சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களை, அவற்றின் இயல்பான சூழலில் கண்டு ரசிக்கமுடியும் என்பதே இதற்கு காரணம்.

தேக்கடியில் படகு சவாரி செல்வது ஆனந்தமான ஒன்றாக கருதப்பட்டாலும், கடந்த 2009ல் நடந்த ஒரு சம்பவம் ஆறாத வடுவாக இன்றும் நீடிக்கிறது. 2009, செப். 30ல் கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ‘ஜலகன்னிகா’ படகு 85 சுற்றுலாப் பயணிகளுடன் தேக்கடி ஏரியில் சவாரி சென்றது. மணக்கவலை என்ற இடத்தில் சென்றபோது திடீரென படகு தண்ணீரில் கவிழ்ந்தது. இதில் 7 குழந்தைகள், 23 பெண்கள் உட்பட 45 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் விபத்திற்கு காரணமானவர்கள் மீது இன்றுவரை விசாரணைதான் நடந்து வருகிறது. முதலில், படகு விபத்து குறித்து விசாரிக்க கோட்டயம் குற்றப்பிரிவு எஸ்பி வல்சன் தலைமையிலான குழுவை நியமித்தது கேரள அரசு. 2010 மே 26ல் மாவட்ட முன்னாள் நீதிபதி மைதீன்குஞ்சு தலைமையில் கமிஷன் அமைத்து நீதி விசாரணை நடத்தவும் கேரள அரசு உத்தரவிட்டது.

நீதிபதி மைதீன்குஞ்சு தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி 2011, ஏப்ரல் 25ல், 235 பக்க அறிக்கையை வழங்கியது. அந்த அறிக்கையில், படகு வடிவமைத்தது முதல் தண்ணீரில் சவாரிக்காக இறக்கியது வரை 22 வகையான குளறுபடிகள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டியது. கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநர் மோகன்லால், இயக்குநர் சிவசங்கரன், படகு வடிவமைப்பாளர் அனந்த சுப்ரமணியன், மத்திய படகு ஆய்வாளர் மாத்யூஸ், சுற்றுலாத்துறை பிரிவு மெக்கானிக்கல் என்ஜினியர் மனோஜ் மாத்யூ, படகு கண்காணிப்பாளர் தேவன், டிரைவர் விக்டர் சாமுவேல், உதவியாளர் அனீஷ் என ஒவ்வொருவரின் அலட்சியத்தினாலேயே இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளையில் படகு விபத்து குறித்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், விபத்தின்போது இறந்தவர்களுடன் வந்த உறவினர், நண்பர்கள் உட்பட 292 பேர்களிடம் வாக்குமூலம் பெற்று, 2013ல் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், படகு டிரைவர் விக்டர் சாமுவேல், உதவியாளர் அனீஷ், வனத்துறை வாட்சர் பிரகாஷ், முன்னாள் படகு தலைமை ஆய்வாளர் மேத்யூ, ஐஆர்எஸ் (இந்தியன் ரெஜிஸ்ட்ரி ஆப் ஷிப்பிங்) சர்வேயர் ரஞ்சித் மற்றும் படகு தயாரித்த விக்னேஷ்வரா மரைன் என்ஜினியரிங் கம்பெனி உரிமையாளர் கிரி, கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழக பொறியாளர் மனோஜ் மாத்யூ ஆகிய ஏழு பேர் குற்றவாளிகள் என தெரிவித்திருந்தனர். நீதிபதி மைதீன்குஞ்சு கமிஷன் குற்றவாளி என அறிவித்தவர்களில் நான்கு பேரின் பெயர்கள் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் நீக்கப்பட்டிருந்தது. இதனால் 2014, டிசம்பர் 24ல் தொடுபுழா கூடுதல் அமர்வு நீதிமன்றம், இரண்டு குற்ற அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளதை விரிவாக தாக்கல் செய்யவும், சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் தரப்பில் தவறு நடந்துள்ளதை விசாரணைக்கு உட்படுத்தவும், இந்த வழக்கில் தொடர் விசாரணை நடத்தவும் குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குப்பின் இரண்டு அறிக்கையிலும் நேரடி தொடர்புடையவர்களுக்கு எதிரான முதல் குற்றப்பத்திரிகை (எ - சார்ஜ்) கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் படகு டிரைவர் விக்டர் சாமுவேல், படகின் பொறுப்பில் உள்ளவர்கள் என குற்றத்தில் நேரடி தொடர்புடைய நான்கு பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர். படகு வடிவமைத்தவர், ஆய்வு செய்தவர், தகுதிச்சான்று வழங்கியவர், சவாரிக்கு அனுமதி வழங்கியவர் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் உட்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டாவது குற்றப்பத்திரிகை (பி - சார்ஜ்) அக்டோபர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தற்போதைய கோட்டயம் குற்றப்பிரிவு எஸ்பி சாபு மேத்யூ தெரிவித்துள்ளார். 45 பேரின் உயிரிழப்புக்கு காரணமான தேக்கடி படகு விபத்து நடந்து இன்றோடு பத்து ஆண்டுகளாகிறது. இந்த விபத்துக்குப்பின் படகுச்சவாரிக்கு பல்வேறு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டாலும், இன்றும் இந்த விபத்து சுற்றுலாப்பயணிகளின் மனதில் ஆறாத வடுவாக நிலைகொண்டு நீடிக்கிறது.

Tags : boat accident ,Thekkady , Thekkady, a boat accident
× RELATED தேக்கடி மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு