×

எந்த மொழியையும் கற்றுக்கொள்வது தவறில்லை மேதகு என்பதை விட சகோதரி என்று அழைப்பதையே விரும்புகிறேன்: சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் தெலங்கானா கவர்னர் தமிழிசை பேச்சு

சென்னை: மேதகு என்பதை விட சகோதரி என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னை பொது நல சங்கம் சார்பில் தெலங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா தியாகராயநகரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாமக தலைவர் ஜி.கே.மணி, சமக  தலைவர் சரத்குமார், தமாகா மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பாராட்டு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:மேதகு என்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன். தமிழக மக்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ந்து சந்திக்க முடியாமல் இருப்பதற்கு வருத்தப்படுகிறேன். மேதகு என்பது வெறும் பதவி சொல்  தான். அரசியலில் அக்கா என்ற சொல் எனக்காகவே அமைந்தது போல் ஆகிவிட்டது.

எல்லா வயதினருக்கும் நான் சகோதரி தான். எப்போதுமே நான் உங்கள் வீட்டு பிள்ளை தான். நான் ஒன்றும் பெரிய சாதனையை செய்யவில்லை. கட்சி எனக்கு கொடுத்த வேலையை நான் சரியாக செய்தேன். கொடுத்த பணியை முழுமூச்சாக  செய்தததால் நான் அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறேன். கவர்னர் அலுவலகத்தில் இப்போது யோகாவை கட்டாயமாக்கி இருக்கிறேன். நல்லவேளை என்னை வட இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மாநிலத்துக்கு அனுப்பிவிடாமல், அருகில் உள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு அனுப்பி  வைத்திருக்கிறார்கள். தற்போது தெலுங்கானா மாநில கவர்னர் ஆகிவிட்டதால், தீவிரமாக தெலுங்கு பேச கற்று வருகிறேன். விரைவில் சரளமாக தெலுங்கு பேசி அசத்துவேன். எந்த மொழியையும் கற்றுக்கொள்வது தவறில்லை. நிச்சயம்  தெலங்கானா மாநில உயர்வுக்காக பாடுபடுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Governor ,Telangana ,commendation ceremony ,Chennai ,Speech ,Ceremony , wrong,language, Telangana Governor , Complimentary,Chennai
× RELATED கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு : தமிழிசை சௌந்தரராஜன் வேதனை