×

ஈஞ்சம்பாக்கம் அருகே அதிகாலையில் சென்டர் மீடியனில் கார் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி: பிறந்தநாள் கொண்டாடிவிட்டு திரும்பியபோது சோகம்

துரைப்பாக்கம்: சென்னை மண்ணடியை சேர்ந்தவர் அகமத்பாகிம் (19). இவர், வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால், நண்பர்கள் ஷபீன் (19), சாய்புல்லா (20) மற்றும் அதே கல்லூரி மாணவர்கள் 7 பேருடன் காரில் கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி சென்று, அங்குள்ள பண்ணை வீட்டில் கேக் வேட்டி கொண்டாடினர்.இதன்பிறகு அங்கிருந்து நேற்று அதிகாலை காரில் அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். முகமது முஸ்ரப் (20) காரை ஓட்டினார். கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அங்கு வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக போலீசார் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட் மீது கார் மோதியது.
தொடர்ந்து, சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற கார் கவிழ்ந்து உருண்டோடி அங்குள்ள கடை மீது மோதி நின்றது.

இதில் காரில் இருந்த மாணவர்கள் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், காரில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஷபீன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரிந்தது. தகவலறிந்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே மற்றொரு மாணவன் அகமத்பாகிம் பரிதாபமாக உயிரிழந்தார். இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : college students ,Injambakkam ,center , 2 students,crashed , center median early,morning , Injambakkam
× RELATED கறம்பக்குடி அருகே மழையூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் கண்காட்சி