×

பல்லாவரம் நகராட்சியில் பல்லாங்குழியாக மாறிய சாலைகள்: பொதுமக்கள் தவிப்பு

தாம்பரம்: பல்லாவரம் நகராட்சியில் உள்ள பெரும்பாலான சாலைகள், பல ஆண்டாக சீரமைக்கப்படாததால், குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால், சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்லாவரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் உள்ள பல முக்கிய சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் புதிதாக போடப்பட்ட தார் சாலைகளும் தரமற்ற முறையில் பணி நடைபெற்றதால், சிதிலமடைந்துள்ளன. இதனால், வெயில் காலத்தில் புழுதி பறந்தும், மழைக்காலத்தில் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சகதியாகவும் மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். குறிப்பாக, 19வது வார்டு பகுதியில் அமைந்துள்ள திருமலை நகர் வடக்கு விரிவாக்கம், சரஸ்வதி முதல் தெரு, இரண்டாவது தெரு, மூன்றாவது தெரு பகுதிகளில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தெருக்கள் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது.

இவற்றை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. தற்போது, மேற்கண்ட தெருக்கள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருவதால் தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வரும் மாணவர்கள், கடை வீதிகளுக்குச் சென்று வரும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் எங்கு குழி உள்ளது என தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதிகளில் உள்ள தெருக்கள் 4 ஆண்டுகளுக்கு முன் கனமழையில் சேதமடைந்தன. பின்னர் இப்பகுதிகளில் உள்ள தெருக்களை சீரமைக்காமல் நகராட்சி அதிகாரிகள் அப்படியே விட்டு விட்டனர்.

தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெருக்களில் எளிதில் சென்று வரமுடியவில்லை. தற்போது அடிக்கடி பெய்துவரும் மழையால் தெருக்கள் முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள தெருக்களை சீரமைத்து தரவேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : roads ,municipality ,Pallavaram , Falling roads ,Pallavaram,municipality,civilian casualties
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு