×

கீழடி தமிழரின் தாய் மடி

மனித வாழ்வின் அடையாளங்கள், நாகரீகங்களை மையமாக கொண்டுதான் வகைப்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் மனிதர்களின் வாழ்வியல் குறித்து, பல்வேறு ஆய்வுகள், அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழாய்வுகள் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளன. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் மிக உன்னதமான நகர நாகரீகத்துடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என கீழடி ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி, கீழடி வைகை நதிக்கரையில் கிடைத்த பொருட்கள் 2,600 ஆண்டுகள் பழமையானது. கிமு 6ம் நூற்றாண்டு முதல் கிபி 1ம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக கீழடி விளங்கியுள்ளது என தெரிவித்துள்ளது. அந்த நாகரீகத்தின் வரலாற்றை, கீழடியின் ‘கீழ் அடியில்’ கிடைத்த அரிய பொக்கிஷங்களின் பின்னணியை பார்ப்போமா? மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தின் கீழடியில் வைகை ஆற்றிலிருந்து 2 கிமீ தூரத்தில்தான் அகழாய்வு நடத்தப்பட்டிருக்கிறது.  தேனி மாவட்டத்தின் வருசநாடு மலைத்தொடரில் பிறந்து சின்னமனூர், மதுரை வழியாக கிழக்கு நோக்கி வைகை நதி பாய்கிறது. திருப்புவனம், ராஜகம்பீரம், மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி ஊர்களைக் கடந்து ராஜசிங்கமங்கலம், ராமநாதபுரம் பெரும் கண்மாய்களை எல்லாம் நிரப்பி, அழகன்குளம் அருகே ஆற்றங்கரை என்னுமிடத்தில் வங்கக்கடலைச் சென்றடைகிறது.

நதி சொல்லும் நாகரீகம்:    நாகரீகம் நதிக்கரையில்தான் தோன்றியதென்பர். மக்கள் வாழ்வின் செழுமைக்கு ஆதாரமான இந்த வைகை நதிக்கரையில்தான் கீழடி நகர நாகரீகமும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வாழ்வியலின் நாகரீக வாழ்வைக் காட்டுகிற ஆதாரமாக கீழடி மாறி இருக்கிறது. கீழடி பகுதியில் முதலில் மக்கள் வழக்கிலேயே அடையாளப்படுத்தப்பட்டது ‘பள்ளிச்சந்நிதி’ எனப்படும் ‘பள்ளிச்சந்தை திடல்’ ஒரு மண்மேடுதான். ஆண்டாண்டு காலமாக இந்த மேட்டில் பழமையான ஒரு ஊர் இருந்து அழிந்து போயிருப்பதை மக்கள் வாய்மொழியாக பேசி வந்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே இங்குதான் இந்த ஆய்வின் துவக்கப்புள்ளி இருந்திருக்கிறது. கீழடி பகுதியில் தற்போது அகழாய்வுக்குரியதாக கருதப்படும் 110 ஏக்கர் நிலங்களில்   தென்னந்தோப்புகள் அமைந்ததே, இப்பகுதியின் தொன்மையான வாழ்விடம் பாதுகாக்கப்பட காரணமாக இருந்துள்ளது. இவ்விடம் மக்கள் வசிப்பிடத்துடன், தொழிற்கூடப்பகுதியாகவும் இருந்திருக்கிறது. 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய காலங்களில் முதல் 3 அகழாய்வினை மத்திய தொல்லியல் துறையின் பெங்களூர் பிரிவினர் செய்துள்ளனர். நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளை தமிழக அரசின் தொல்லியல் துறை ஏற்றுள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள அகழாய்வுகளில் தமிழர்களின் வாழ்வியலுக்கான கட்டிடங்களுடன், சுமார் 13,500க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.

மட்பாண்ட, உலோகப் பொருட்களுடன், அணிகலன்கள், முத்திரைகள், எழுது பொருட்கள், யானைத் தந்தத்திலான தாயக்கட்டை, சதுரங்க விளையாட்டு காய்கள் இப்படி ஏராளம். இதில் நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை தரும் தகவல்கள் வியப்பில் விழி விரிய வைக்கின்றன. இந்த அகழாய்வில் மட்டும் செங்கல் கட்டுமானம், மண்பாண்ட பொருட்கள், அணிகலன்கள் என 5,820 அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. கிமு 6ம் நூற்றாண்டு முதல் கிபி 1ம் நூற்றாண்டு வரையிலும் வளமை மிக்க பண்பாட்டுப் பகுதியாக கீழடி இருந்துள்ளது. கிமு 6ம் நூற்றாண்டிலேயே நகரமயமாதல் துவங்கி இருக்கிறது. தமிழ் பிராமி எழுத்து வடிவ காலத்தை கிமு 5ம் நூற்றாண்டு என்றே நாம் கணக்கிட்டு வைத்திருக்கும் நிலையில், மேலும் நூறாண்டுக்கு முன்பே கிமு 6ம் நூற்றாண்டின் ‘தமிழ் பிராமி’ கிடைத்து, வரலாற்றையே மாற்றிப் போட்டிருக்கிறது.

அசந்தது அமெரிக்கா: நான்கு கட்ட ஆய்வில் கிடைத்த பொருட்களில் 70 எலும்புத்துண்டு மாதிரிகளில் 6 மாதிரிகள் அமெரிக்காவின் ‘பீட்டா அனலைட்டிக்’ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு ‘கார்பன் டேட்டிங்’ சோதனைகள், பல்வேறு நிலைகளில் 2 மாதங்களாக நடந்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லியம் லிப்பி. இவர் 1949ல் கண்டறிந்த ‘கார்பன் டேட்டிங்’ என்ற கரிமப் பகுப்பாய்வு துல்லிய கணிப்பை தரும். இதன் மூலம் 60 ஆயிரம் ஆண்டுகள் வரையான காலக்கட்டத்தை கணிக்க முடியும். இம்முறையில் நடத்திய ஆய்வில்தான் கீழடியின் பழங்கால நாகரீகத்தின் வயது கண்டறியப்பட்டு, அமெரிக்கர்களை அசந்து போக வைத்துள்ளது.

தடைகளை தாண்டி... 2015ம் ஆண்டில் துவங்கிய முதல்கட்ட, இரண்டாம் கட்ட அகழாய்வுகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்திய மத்திய தொல்லியல் துறை மூன்றாம் கட்ட அகழாய்வை தொடர விரும்பவில்லை. வைகை சமவெளி நாகரீகமானது, சிந்துவெளி நாகரீகத்திற்கான சமகாலத்து நாகரீகம் என உலகத்தமிழர்கள் விழித்துக் கொண்டனர். 2 கட்ட அகழாய்வுகளை தலைமை ஏற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசால் அஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதைக்கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்தன. பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள், ஐகோர்ட்டில் நடந்த சட்டப்போராட்டத்திற்கு பிறகு 2017 ஜனவரியில் துவங்க வேண்டிய 3ம் கட்ட அகழாய்வு மே மாதம் துவங்கி, செப். 3ல் முடிந்தது. புதிதாக பொறுப்பேற்ற மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் ராம் தொழிற்கூட கட்டுமானத்தின் தொடர்ச்சி இல்லையென அறிவித்தார். ஆனால் அப்போது 34 தொல்லியல் குழிகளில் 5,820 பொருட்கள் கிடைத்தன. இரு கட்ட ஆய்வு பொருட்களை கரிமப் பகுப்பாய்வு செய்து, காலத்தைக் கணித்து இடைக்கால அறிக்கையை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா,  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் தமிழரின் தொன்மை வாழ்வியல் உறுதியாக்கப்பட்டது.

தொடர்ந்து, நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை ஏற்று, இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடந்தது. ஐந்தாம் கட்ட அகழாய்வு 2019, ஜூன் 13ல் துவங்கி 52 தொல் குழிகள் தோண்டப்பட்டு நடந்து வருகிறது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இரண்டரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, ரூ.1 கோடி நிதியும் தொல்லியல் துறைக்கு தமிழக அரசால் தரப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு கட்ட ஆய்வுகளை விட தற்போது நடந்து வரும் 5ம் கட்ட ஆய்வில் கூடுதல் வரலாற்று தொன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

தமிழர் புகழை தரணி பேசும்

மதுரை தொல்லியல் ஆய்வாளர்  சாந்தலிங்கம் கூறும்போது, ‘‘கீழடியில் 1980-81லேயே ஆசிரியர்  பாலசுப்பிரமணியம் என்பவர், பள்ளிச்சந்தை திடலில் கிடைத்த எழுத்துரு கொண்ட  பானை ஓடுகளை தமிழக தொல்லியல் துறையிடம் கொடுத்து விபரம் கேட்டிருந்தார்.  இதன்பேரில் ஆய்வு நடத்தப்பட்டும், அது தொடரவில்லை. இதுதான் முதல் முயற்சி.  ஐந்தாம் கட்டத்தையும் கடந்து ஆய்வுகள் தொடர்ந்தால், உலகளவில் அத்தனையிலும் தமிழர்கள் முன்னிலை வகித்தது தெரிய வரும்’’ என்றார்.

உணவுக்கும்.. உழவுக்கும்...

கீழடி  அகழாய்வில் காளை, பசு, எருமை, வெள்ளாடு மற்றும் கலைமான், காட்டுப்பன்றி  உள்ளிட்ட விலங்குகளின் எலும்பு மாதிரிகள் கிடைத்துள்ளன. சில எலும்புகளில்  வெட்டுத்தழும்புகள் உள்ளன. இவை உணவிற்காகவும், விவசாயத்திற்கு உழவு  மாடுகளும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அக்கால மக்கள் விவசாயம், கால்நடை  வளர்ப்பில் தீவிரம் காட்டியதை இது உணர்த்துகிறது.

ஆடையிலும் அசத்தல்

அகழாய்வில் நூல்களை நூற்க பயன்படும் தக்கிளி, துணிகளில் உருவ  வடிவமைப்புகளை வரைவதற்கு பயன்படுத்தப்படும் எலும்பிலான கூரிய முனைகள் கொண்ட  வரைகோல், தறியில் தொங்க விடும் கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட  குண்டு, செம்பிலான ஊசி, சுடுமண் பாத்திரம் போன்ற தொல்பொருட்கள்  கண்டெடுக்கப்பட்டன. இது இப்பகுதியில் நெசவுத்தொழில் சிறந்து விளங்கியதற்கு  சான்றாக அமைகிறது.

காலத்தை கணிக்கும் ‘காந்தம்’

மும்பையின் இந்திய புவிகாந்தவியல் நிறுவனம், அண்ணா பல்கலை. தொலை உணர்வு நிறுவனம், பாரதிதாசன் பல்கலை. தொலை உணர்வு துறை இணைந்து கீழடியில் அகழாய்வு சர்வே பணிகளை மேற்கொண்டுள்ளன. தரையை ஊடுருவும் வகையிலும், காந்த சக்தியைக் கொண்டு கண்டறியும் விதத்திலும், ஆளில்லா வான்வழி கருவிகளை இயக்கியும் என பலதரப்பட்ட நிலைகளில் ரேடார்’ கொண்டு நவீனத்துவ ஆய்வுகள் நிகழ்த்தி, சர்வே செய்கிறது.

உறுதியோடு உள்ள வீடு...

அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்பு சாந்து, கூரை ஓடுகள்,  சுடுமண்ணாலான உறைகிணற்றில் பூச்சு ஆகியவற்றில் சிலிக்கா மண், சுண்ணாம்பு,  இரும்பு, அலுமினியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் கிடைக்கின்றன. செங்கல்,  கூரை கட்டுமான வீடுகளில் 80 சதவீதம் சிலிக்கா, 7 சதவீதம் சுண்ணாம்பு  கலக்கப்பட்டுள்ளது. இது அக்காலத்திலேயே தமிழர்கள் கட்டுமான உறுதியில்  கைதேர்ந்தவர்கள் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல... ஆய்வில்  கிடைத்த 13 மீட்டர் நீளச்சுவர் செங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.  தரைத்தளம் களிமண்ணாலும், செங்கல் ஓடுகளால் மேற்கூரையும் செய்துள்ளனர்.  மேற்கூரையை தரையுடன் பிணைக்க மரத்தூண் வைத்து இரும்பு ஆணிகளால்  இணைத்துள்ளனர்.

ஓடியாடி விளையாடு...

அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்ணாலான விளையாட்டு பொருட்கள் பொழுதுபோக்கு அம்சத்தை வெளிக்காட்டுகின்றன. கீழடியில் பெண்கள் விளையாடும்  வட்டச்சில்லுகள் (பாண்டி, நொண்டி விளையாட்டு), தாயம் விளையாடும்  பகடைக்காய்கள், சிறுவர்கள் கயிறு கட்டி விளையாடும் சுடுமண்  வட்டச்சுற்றிகள், வண்டி சக்கரங்கள், சதுரங்க காய்கள் கிடைத்துள்ளன.

தங்கமே.. தங்கமே...

கீழடியில்  பெண்கள் அணியும் தங்க ஆபரணத்துண்டுகள், செம்பு அணிகலன்கள்,  கண்ணாடி மற்றும் சுடுமண் மணிகள், சங்கு வளையல்கள், தங்க வளையல்கள், பளிங்கு  மணிகள் உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன. இவை சங்கக்காலம் வளமையாக இருந்ததை  வெளிப்படுத்துகிறது. இவைகளோடு வீட்டு உணவு பயன்பாட்டுக்காக அரவைக்கல்,  குடுவை போன்றவையும் கிடைத்துள்ளன.

Tags : Kilati ,Tamil , Kilati , Mother lap ,Tamil people
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு