×

தமிழக அரசு சித்த மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி : கூடுதல் நிதி ஒதுக்கி தரம் உயர்த்த கோரிக்கை

வேலூர்: தமிழக அரசு மருத்துவமனைகளில் சித்த மருந்துகள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். .தமிழக அரசு சித்த மருத்துவமனைகளில் 1,047 சித்த மருத்துவ நிலையங்கள், 100 ஆயுர்வேத நிலையங்கள், 65 யுனானி நிலையங்கள், 106 யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள், 107 ஓமியோபதி நிலையங்கள் என்று மொத்தம் 1,425 பாரம்பரிய மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ நிலையங்களில் நோயாளிகளுக்காக 1,210 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  தமிழக அரசின் இயற்கை மருத்துவ நிலையங்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், போதிய மருந்துகள் இல்லாததால் சித்த மருத்துவ நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து சித்த மருத்துவ நிலையங்களில் ஏமாற்றமடைந்த நோயாளிகள் கூறியதாவது: அரசு சித்த மருத்துவமனைகளில் சமீபகாலமாக மருந்துகள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. குறிப்பிட்ட உடல் பாதிப்புக்கு வழங்கப்பட்ட மருந்துகளால் போதிய குணம் அடைந்தோம். தற்போது பெரும்பாலான நோய்களுக்கு புதிய மருந்துகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கேட்டால், அந்த மருந்து வராததால் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

அதேபோல், காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட சூரணம் போன்றவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் மட்டுமே அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்ப்பட்டு வருகிறது. மேலும் மூட்டுவலி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வழங்கப்படுவதில்லை. மேலும் சர்க்கரை வியாதி போன்றவற்றுக்கு தொடர்ச்சியாக மருந்துகளை பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் சமீப காலமாக மருந்துகள் பற்றாக்குறையை காரணம் காட்டி ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகளை வழங்காமல், 10 நாட்களுக்கு தேவையான மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், மாதத்துக்கு 3 அல்லது 4 முறை மருத்துவமனைக்கு வந்து செல்கிறோம். இதனால், அதிகப்படியான போக்குவரத்து கட்டணம் செலவழிக்கிறோம். எனவே, சித்த மருத்துவமனைகளில் உள்ள மருந்துகள் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், குறிப்பிட்ட வியாதிகளுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்படுகிறது. போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், வீரியமிக்க மருந்துகள் வழங்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, தமிழக அரசு சித்த மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் வகையில், கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சித்த மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சித்த மருத்துவமனைகளுக்கு தேவையான சுமார் 70 வகையான மருந்துகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மற்ற மருந்துகள் தயாரிக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் மருந்துகள் தயாரிப்பு பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியாரிடமிருந்து மருந்துகளை கொள்முதல் செய்வதும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் 25 சதவீதம் மருந்துகள் சப்ளை குறைக்கப்பட்டது. தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுவதால் மேலும் 25 சதவீதம் மருந்துகள் சப்ளை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 சதவீதம் வரை சித்த மருத்துவமனைகளுக்கு மருந்துகள் சப்ளை குறைந்துள்ளது. மேலும் நோயாளிகளின் வருகை சித்த மருத்துவமனைகளுக்கு அதிகரித்துள்ளது. இதனால், மருந்துகள் பற்றாக்குறை நீடிக்கிறது’ என்றனர்.

அலோபதி மருத்துவத்தை மிஞ்சியது

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி, குழந்தைகள் உட்பட பலரது உயிர்களை பலி வாங்கிவிட்டது. இந்த டெங்கு காய்ச்சலை தடுப்பது, குணப்படுத்துவது போன்ற அலோபதி மருத்துவத்தை மிஞ்சிய சாதனையை நிலவேம்பு குடிநீர் மூலம் சித்த மருத்துவம் மட்டுமே முறியடித்துள்ளது. இன்றும் சித்த மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீரை பலர் குடித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், சித்த மருத்துவத்தின் தரத்துக்கு இதுவே மிகப்பெரிய சாட்சி.

காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்


இயற்கை  மருத்துவங்களான சித்தா, யுனானி உள்ளிட்டவற்றில் குறிப்பிட்ட நோய்களுக்கு  ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம் நோய் பாதிப்பின் அளவை டாக்டர்கள்  கண்டறிகின்றனர். இதனால் பாதிப்புக்கு ஏற்றவாறு வீரியமிக்க மருந்துகள் வழங்க  முடியும். இந்நிலையில், இயற்கை மருத்துவங்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு  திட்டத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது. எனவே ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள்  செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஏழைகள் பணம் செலவழிக்கின்றனர். இதை  தவிர்க்கும் வகையில் இயற்கை மருத்துவ முறையை, தமிழக அரசின் மருத்துவ  காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதன்  மூலம் கிடைக்கும் வருவாயில், இயற்கை மருத்துவத்தை தரம் உயர்த்த முடியும்  என்று மருத்துவ அதிகாரிகளும் கூறுகின்றனர்.

Tags : hospitals ,Siddha ,Siddha Hospitals ,Tamil Nadu , Drug shortage ,Siddha hospitals
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...