×

டீசல் ஜெனரேட்டர்களுக்கு ‘குட் பை’ ரயில் பெட்டிகள் அனைத்தும் எல்எச்பிக்கு மாறுகிறது

நாகர்கோவில்: பாரம்பரிய ரயில் பெட்டிகளுக்கு விடை கொடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்பெட்டிகளும் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. ரயில்வேயில் ‘லிங்க் ஹாப்மேன் புஷ்’ எனப்படும் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. சில ரயில்களில் மட்டுமே இது முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ரயில்வேயில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களின் பெட்டிகளும் எல்எச்பி பெட்டிகளாக மாற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏசி உட்பட அனைத்து பெட்டிகளும் நேரடி மின்சாரம் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ரயில்களிலும் ஜெனரேட்டர் கார் இணைப்பு என்பது தேவையில்லாத ஒன்றாகிவிடும். இந்த ஆண்டு 284 ரயில் பெட்டிகள் இந்த வகையில் மின்மயமாகிறது. பொதுவாக ரயில் பெட்டிகளில் வெளிச்சத்திற்கும், குளிரூட்டுவதற்கும் டீசல் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது.

முழுக்க ஏசி பெட்டிகளை கொண்ட ரயில்களில் டீசல் கார் என்ற சிறப்பு பெட்டி இணைக்கப்படும். இவற்றின் ஒலி அசாதாரணமானதாக இருக்கும். மேலும் இதனால் புழுதி படலமும் ஏற்படுகிறது. இந்தநிலையில்தான் பாரம்பரிய பெட்டிகளில் இருந்து எல்எச்பி பெட்டிகளுக்கு அனைத்து ரயில்களும் மாற்றப்படுவதின் மூலம் கூடுதல் பெட்டிகள் இணைக்க வாய்ப்பு, டீசல் ஜெனரேட்டர் இயக்கம் ரத்து , வருவாய் அதிகரிப்பு போன்றவை இருப்பதால் இதனை மேற்கொள்ள ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும் ரயில்மின் பாதையில் உள்ள மின்சார இணைப்புகளில் இருந்து நேரடியாக மின்சாரம் பெற்று செயல்படுவதின் வாயிலாக ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ₹36 என்பதற்கு பதிலாக ₹6 மட்டுமே செலவாகும் என்று ரயில்வே கணக்கிட்டுள்ளது. இது ஹெட் ஆன் ஜெனரேஷன் டெக்னாலஜி (Head on Generation technology)  ஆகும். மேலும் இதுவரை 342 ரயில்கள் இந்த மின்சாரம் பெறும் முறைக்கு மாறிய நிலையில் 759 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 284 ரயில்கள் இதே வசதியை பெறும் நிலையில் 1390 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இது பசுமை ரயில் இயக்கமாக மாறும் என்பதும் மற்றொரு சிறப்பு ஆகும்.

Tags : Good diesel train sets,diesel generators
× RELATED இன்றும் பல மாவட்டங்களில் வெயில்...