×

இந்திய-சீனா தலைவர்கள் சந்தித்துபேசும் நிலையில் மாமல்லபுரம் அருகே கைத்துப்பாக்கி, அரிவாளுடன் 8 பேர் கும்பல் சிக்கியது


* போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை
* பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதியா?

சென்னை: பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்புக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் கைதுப்பாக்கி, அரிவாள்களுடன் 8 பேர் கும்பல் சிக்கிய சம்பவம் கேளம்பாக்கம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி-சீன அதிபர்  சந்திப்பை சீர் குலைக்க வந்தார்களா என அவர்களிடம் துருவி, துருவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.  பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஜின்பிங் ஆகியோரது சந்திப்பு நிகழ்ச்சி, மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இதையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கேளம்பாக்கம், ரத்தினமங்கலம் அடுத்த வெங்கப்பாக்கம் பொன்னியம்மன் நகர் பகுதியில் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக தாழம்பூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல்  கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பழனி, எஸ்ஐ உதயகுமார், திருப்போரூர் எஸ்ஐ ராஜா மற்றும் காஞ்சிபுரம் தனிப்படையினர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் கும்பல் தப்பி ஓட முயன்றது. வீட்டில் இருந்த 8 பேரை  போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தபோது அங்கு ஒரு கைத்துப்பாக்கி, 3 அரிவாள் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து 8 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.முதல்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் மீது கீழக்கரை  காவல்நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பிடிபட்ட 8 பேரில்  7 பேரும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம நபர்கள் தங்கியிருந்த வீடு வேங்கடமங்கலத்தை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமானது என்பதால் போலீசார், அவரிடமும் விசாரித்து வருகின்றனர். இவர்கள் தங்கிருந்த வீடு 100 சதுரஅடி பரப்பளவு கொண்ட மிகச் சிறிய வீடு. இங்கு கழிப்பறை, குளியலறை, மின்சார வசதி இல்லை. இப்படிப்பட்ட ஒரு வீட்டை மர்ம நபர்கள் எதற்காக தேர்வு செய்தனர். இவர்களுடன் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சியை சீர்குலைக்க ஏதேனும் சதித்திட்டம் இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளதால் புதுடெல்லியில் உள்ள என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிடிபட்டவர்களை எந்த இடத்தில் வைத்துள்ளனர் என்ற தகவலையும், பிடிபட்டவர்கள் யார் என்பது குறித்த தகவலையும் போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.

மோடி-ஜின்பிங் சந்திப்பின்போது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். பிடிபட்ட 8 பேரின் தகவல்கள் ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்களா அல்லது தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்களா என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி எந்த வகையை சேர்ந்தது, எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர். மேலும் இவர்கள் எதற்கு இங்கு வந்தார்கள், யாரையாவது கொலை செய்ய  பதுங்கியிருந்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும், இவர்கள் தலைவர்களின் பேச்சை சீர்குலைக்கும் எண்ணம் ஏதாவது உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோடி வருவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் கேளம்பாக்கம் அருகே கைதுப்பாக்கி  ஆயுதங்களுடன் 8 மர்ம நபர்கள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags : sickles ,leaders ,Indo-China ,Mamallapuram ,Mamallapuram cantittupecum ,gang ,leaders handgun , Indian and Chinese leaders, Mamallapuram and handguns
× RELATED நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை...