×

ஆப்கனில் தேர்தலை சீர்குலைக்க தாக்குதல்: தேர்தல் அதிகாரி உட்பட 2 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த அதிபர் தேர்தலின்போது தலிபான் தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய அதிபர் அஷ்ரப்  கனியின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் அங்கு அதிபர்  பதவிக்கான தேர்தல்  நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தற்போதைய அதிபர்  அஷ்ரப் கனி மற்றும் அவரது தலைமை நிர்வாகியான அப்துல்லா உள்ளிட்ட  18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரசாரங்களின் போது,   பொதுமக்கள் வாக்களிக்க கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில்,  தலிபான்கள் அதிகளவில் குண்டுவெடிப்பு, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால்,  நேற்று நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மசூதி, வாக்குச்சாவடிகளை  குறிவைத்து தலிபான்கள் தொடர் வெடிகுண்டு, ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதில் கந்தகார் பகுதி மசூதி, வாக்குச்சாவடி, நங்கர்கார் மாகாணத்தின் சோர்க்  ரோட் மாவட்டத்தில் உள்ள  வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு,  ராக்கெட் தாக்குதலில் தேர்தல் அதிகாரி உள்பட இரண்டு பேர் பலியாகினர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.தலைநகர் காபூலில் வாக்களித்த  பின்னர் அதிபர் அஷ்ரப் கனி அளித்த  பேட்டியில், ஆப்கனில் அமைதி நிலவ வேண்டும் என்பதே மக்களின் முதல்  விருப்பம். அதற்கான திட்டம் தயாராக உள்ளது’’ என்றார்.

Tags : election ,Afghan ,election official ,attack , Afghan, election, election official, 2 killed
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...