×

கீழடியில் மட்டுமல்ல நாகரிகத்தில் தமிழர்கள் உலகத்துக்கே முன்னோடியாக விளங்கியவர்கள்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கீழடியில் மட்டுமல்ல, நம்முடைய தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான  நாகரிகத்தையும் செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே  முன்னோடியாக விளங்கியவர்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாம் எதிர்க்கட்சி தான். ஆனாலும் மக்கள் நம் மீது மாறாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்றும் அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக நமது கடமையை தொடர்ந்து செம்மையாக நிறைவேற்றி வருகிறோம். கீழடியிலும் நமக்கான கடமைகள்  நிறைய இருக்கின்றன.  தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்று தருவதற்கு பரிதிமாற்கலைஞர் போன்ற அறிஞர்கள் 100 ஆண்டுகளாக மேற்கொண்ட  முயற்சிகளையும் தலைவர் கலைஞரால் தான் நிறைவேற்ற முடிந்தது.  திமுகவின் 2019 நாடாளுமன்றத் தேர்தல்  அறிக்கையில், “கீழடியில் அகழ்வாய்வு தொடரவும், அருங்காட்சியகம் அமைக்கவும் தேவையான நிதியுதவிகள் மத்திய அரசு தந்திட திமுக பாடுபடும்” என தெரிவித்திருந்தோம்.  

ஒவ்வொரு கட்டத்திலும் கீழடிக்காக திமுக  தொடர்ந்து உரிமைக்  குரல் எழுப்பி வந்துள்ளது. கீழடியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். கீழடியுடன் ஆய்வு தொடங்கப்பட்ட குஜராத் மாநிலம் “வாட்’’ என்ற இடத்தில் சர்வதேசத்  தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கீழடியிலும் அதேபோன்ற உலகத் தரம் வாய்ந்த  அருங்காட்சியகம்  அமைக்கப்படுவதுடன், இந்த வைகை ஆற்று நாகரிகத்தின் தொடர்ச்சியான ஆய்வுகளுக்காக மதுரையில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக  இருந்த கனிமொழி இதுகுறித்து,  பலமுறை பேசியதுடன், தற்போது மக்களவை உறுப்பினராகவும் வலியுறுத்தி வருகிறார்.

திமுக சார்பில் நான் அனுப்பிய கோரிக்கை மனுவை  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், அவருடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு தனிப்  பொறுப்பு வகிக்கும் இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலை சந்தித்து  அளித்திருக்கிறார்கள்.  கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசிடம் இடம் ஒதுக்கித் தருமாறு மத்திய அரசு கேட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர்  தெரிவித்திருக்கிறார். அதற்கான இடவசதியை மாநில அரசு விரைந்து உருவாக்கித் தரவேண்டும். அதே  நேரத்தில், கீழடியில் இதற்கு முன்பாக மத்திய தொல்லியல் துறை நடத்தியுள்ள 3 கட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட வேண்டும். தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்திட வேண்டும்.  
கீழடி மட்டுமின்றி, ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் குறித்த முடிவுகளையும் தொல்லியல் துறை வெளியிடவேண்டியது கட்டாயமாகிறது.

திமுக ஆட்சிக்காலத்தில்  கலைஞரின் முனைப்பினால், கங்கைகொண்ட சோழபுரம்,  பரிகுளம், மாங்குளம், செம்பியன்கண்டியூர், பூம்புகார், அழகன்குளம், ராஜாக்கமங்கலம், தேரிருவேலி, தலைச்சங்காடு, நெடுங்கூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2010ல் நடந்த உலகத் தமிழ்ச்   செம்மொழி மாநாட்டின் போது, சோழமன்னன் ராஜாதிராஜன் ஆட்சிக்கால செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு, மாநாட்டுக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன. கீழடியாக இருந்தாலும் சிந்துசமவெளி நாகரிகமாக இருந்தாலும் அது தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சி-நீட்சி என்றே ஆய்வாளர்கள்  கருதுகிறார்கள். இந்த ஆய்வுகள் ஒரு பேருண்மையை உணர்த்துகின்றன. அதாவது,  இந்தியாவின் வரலாறு  தெற்கிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

கீழடியில் மட்டுமல்ல, நம்முடைய  தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும் செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள். அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் கடமையாகும்.  பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அதை வலியுறுத்துவோம்! பாதுகாக்கின்ற பொறுப்பை மேற்கொள்ளும் காலமும் கனிந்து வரும்; அப்போது அகிலம் அகம் மிக மகிழ்ந்திடும் வண்ணம் அந்தப் பொறுப்பை ஆற்றலுடன்  நிறைவேற்றுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : forerunners ,world ,MK Stalin ,Kilati Tamils , Accordingly, Tamils, MK Stalin
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...