×

மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு செய்யக்கோரிய வழக்கில் மின்வாரிய தொழிற்சங்கங்களை சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த தொடரப்பட்ட வழக்கில் தமிழக மின்வாரியம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருகை புரிவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப்பதிவு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மின்வாரிய தொழிற்சங்கங்களை பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்டு நவம்பர் 5ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

கோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோ மெட்ரிக் கருவி பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் பணி நேரம் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல மின் கட்டணம் வசூல் மையம் காலை 8.30 முதல் பிற்பகல் 2.30 வரை செயல்படுகிறது. ஆனால் பெரும்பாலான அலுவலகங்களில் உரிய நேரத்தில் ஊழியர்கள் வருவதில்லை. மின் பணி தொடர்பாக பல முறை அலுவலகம் சென்றாலும், உரிய அலுவலர்களை பார்க்க இயலாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. எனவே அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோ மெட்ரிக் கருவி பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : electricity employees ,Electricity Employee ,High Court ,Government of Tamil Nadu , Electricity Employee, Biometric, Government of Tamil Nadu
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...