×

விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமியை வழி அனுப்பச் வந்த அதிமுக பிரமுகரிடம் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு: போலீசார் விசாரணை

சென்னை: விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமியை வழி அனுப்பச் வந்த அதிமுக பிரமுகரிடம் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் நடைபெறவுள்ள வனக் காப்பாளா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். எனவே, கோவை செல்வதற்காக இன்று மதியம் சென்னை விமான நிலையத்துக்கு முதல்வர் பழனிசாமி வந்தார். அப்போது அவரை வழியனுப்புவதற்காக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விமான நிலையம் வந்தனர். விமான நிலையம் உள்ளே செல்லும்போது அனைவரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ஜீவானந்தத்தை காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர். உடனடியாக அவரை மீனம்பாக்கம் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தமிழக முதல்வர் பயணம் செய்யவுள்ள நேரத்தில் இதுபோன்று துப்பாக்கி எடுத்து வருவது குற்றம் என்பது தமக்கு தெரியாது என்று கூறிய அவர், துப்பாக்கியை பயன்படுத்துவதற்கா உரிய சான்றிதழ் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சான்றிதழை காண்பிக்கும்படி அதிகாரிகள் கேட்ட நிலையில், அவர் தற்போது தம்மிடம் இல்லை என்றும், விரைவில் அதனை காண்பிப்பதாகவும் ஜீவானந்தம் பதில் தெரிவித்தார். இதனால் சான்றிதழ் காண்பிக்கப்பட்டு, அது அசல் சான்றிதழ் தான் என்பதை உறுதி செய்த பின்னரே காவல்நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியும் என்று ஜீவானந்தத்திடம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆவணம் சரியாக இருக்கும் பட்சத்தில் கடிதம் ஒன்றும் ஜீவானந்தத்திடம் இருந்து எழுதி பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சான்றிதழ் போலியானது என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : airport ,Palanisamy , Airport, CM Palanisamy, AIADMK member, Gun
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்