×

தண்ணீர் சிக்கனமாக பயன்பாடு  குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவருக்கு தேசிய விருது

காரைக்குடி :  மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் இந்தியா முழுவதும் நீரை சிக்கனப்படுத்தி பயன்படுத்தியதற்கான வழங்கப்படும் தேசிய விருது குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் இந்தியா முழுவதும் தண்ணீரை சிக்கனப்படுத்தி பயன்படுத்தக்கூடிய துறைகள், பொதுத்துறைகள் நிறுவனங்கள், விஞ்ஞானக்கூடங்கள் மற்றும் தனிநபர் பங்களிப்பை ஆராய்ந்து அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக மத்திய தரசு ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி இந்தியா முழுவதும் பல்வேறு துறைகள் 200க்கும் மேற்பட்ட விண்ணபங்கள் அனுப்பி இருந்தன. இதில் 140 விண்ணப்பங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. மத்திய அரசினால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுக்களின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளில் செய்யப்பட்ட பணிகளின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டது. மூன்று தவணைகளில் இந்த குழு ஆராய்ந்து இறுதி அறிக்கை மத்திய அரசுக்கு வழங்கியது.

இதில் காரைக்குடி அருகே குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் ஆராய்ச்சி திட்டமான வயல்வெளி சோதனைத்திட்டம் மூலமாக நுண்ணீர்பாசன உயர்தொழில்நுட்பங்களைக் கொண்டு 40 சதவீதம் நீர் சேமிப்பு உறுதி செய்யப்பட்டது. சாலைகிராமம், இளையான்குடி, மேலக்காடு, கண்டிப்பட்டி மற்றும் காளையார்கோவில் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு நுண்ணீர்பாசனம், பட்டாம்பூச்சி பாசனம் மற்றும் நீர் உரப்பாசனம் முறைகள் மூலம் 40 சதவீத நீர், வேலையாட்கள் சேமிப்பு மற்றும் 33 சதவீதம் மின்சார சேமிப்பு பெறப்பட்டது.

நீரை சிக்கனமாக வழங்கும் தொழில்நுட்பத்தோடு நீரில் உரங்களையும் கலந்து வழங்கக்கூடிய தொழில்நுட்பத்தை வேளாண் அறிவியல் நிலையம் வயல் வெளி சோதனைகள் மூலம் வழங்கியது. இந்த தொழில் நுட்ப பரவல் திட்டத்திற்கு முதன்மை ஆராய்ச்சியாளராக செயல்பட்ட குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேளாண் விஞ்ஞானி செந்தூர்குமரனுக்கு கடந்த 25ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தேசிய விருதினை வழங்கினார்.

Tags : President ,government ,Kundrakudi Agricultural Science Institute ,National Award for Climate Change Science Center ,Central , Central Government , water, Kundrakudi,Agricultural Science Institute
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...