×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை பணியிடை நீக்கம்; உதவி செய்த இடைத்தரகர் கேரளாவில் கைது

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக வெங்கடேசன் பணியாற்றி வந்தார். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மருத்துவர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை அடுத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் 2016ம் ஆண்டு கட்டாயமாக்கியது. 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மருத்துவ படிப்பின் மீதான அதீத மோகம் காரணமாக முறைகேடான வழிகளில் மருத்துவம் சேர்வதற்கு முயற்சிகளும் அரங்கேறுகின்றன.

அதில் ஒன்று, வேறு ஒருவரை தேர்வு எழுத வைப்பது. அவ்வாறு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா, தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் டாக்டர் வெங்கடேசன் பணியாற்றி வருகிறார். இவரது மகன் உதித்சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்துள்ளார்.

இதுபற்றி கடந்த 11ம் தேதி தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இ-மெயில் மூலம் அசோக் கிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் குழு அமைத்து விசாரணை நடத்தினார். குழுவின் அறிக்கைப்படி, கல்லூரி முதல்வர் போலீசில் புகார் அளித்தார்.  இதையடுத்து உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானார். அவரை தமிழக போலீசார் வலைவீசி தேடி வந்தனர். தமிழகம் முழுவதும், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த வழக்கை டிஜிபி, சிபிசிஐடி போலீசுக்கு மாற்றினார்.

சிபிசிஐடி போலீசார் ஆந்திர மாநிலம், திருப்பதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த உதித்சூர்யா, அவரது தந்தை  டாக்டர் வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதைதொடர்ந்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனை சிபிசிஐடி போலீசார் நேற்றிரவு ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வந்த வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இடைத்தரகர் கைது


நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட ஜோசப் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளத்தில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஜோசப்பை தமிழகம் கொண்டுவர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Udit Surya ,Assistant intermediary ,Stanley Hospital ,Father Venkatesan , NEET Exam, impersonation, Udit Surya, Father Venkatesan, Stanley Hospital, dismissal, intermediary arrested
× RELATED மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர...