×

திருப்பதி அருகே பீமவரம் வனத்தில் செம்மரம் வெட்டிய கும்பலை பிடிக்க போலீசார் துப்பாக்கிச் சூடு : ஒருவர் கைது

ஹைதராபாத் : திருப்பதி அருகே சேஷாச்சலம் வனத்தில் செம்மரம் வெட்டிக் கொண்டு வந்தவர்களை பிடிக்க ஆந்திர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டிஎஸ்பி அல்லா பாஷா தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் உடன் இணைந்து சேஷாசல வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மண்டலம் அருகே பீமவரம் வனத்தில் செம்மரங்களை வெட்டிக் கொண்டு ஒரு கும்பல் வருவதை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதை பார்த்த கும்பல் செம்மரங்களை வீசிவிட்டு போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். செம்மரம் வெட்டிய கும்பல் கற்களை வீசி தாக்கியதால் நிலைக்குலைந்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அப்போது நிலை தடுமாறி விழுந்த ஒருவர் போலீசிடம் சிக்கி கொண்ட நிலையில், மற்ற 20 பேர் காட்டுக்குள் தப்பி ஓடினர். போலீசிடம் பிடிப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பி ஓடியவர்களை பிடிக்க கூடுதலாக போலீசாரை வரவழைத்து உள்ளனர். தடை செய்யப்பட்ட சேஷாச்சலம் வனத்தில் அத்துமீறி நுழைந்து செம்மரம் வெட்டியுள்ளதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.  இதை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 செம்மரக்கட்டைகளையும் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Bhimavaram forest ,Tirupati ,Bhimavaram , Seshachalam, Chemmarakkad, Police, Firing, Tirupati, Bhimavaram
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...