×

திருப்பதியில் 7.53 கோடியில் பிரமோற்சவ ஏற்பாடு தீவிரம்: அலங்காரத்திற்கு 40 டன் பூக்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 8ம் தேதி நிறைவுபெறுகிறது. பிரமோற்சவ நாட்களில் காலை, இரவு என்று 2 வேளையும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். விழா ஏற்பாடுகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தை சிறப்பாக நடத்த 7 கோடியே 53 லட்சம் செலவில் அனைத்து ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. விழா நாட்களில் 40 டன் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளது. பிரமோற்சவத்தை காண 9 நாட்களும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள். எனவே பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் திருப்பதி மலையில் 3,100 போலீசார், தேவஸ்தான விஜிலன்ஸ் துறையில் பணியாற்றும் 1000 ஊழியர்கள், 3,500 வாரி சேவை அமைப்பின் தன்னார்வலர்கள், ஊர்க்காவல் படை மற்றும் சாரணர் இயக்கத்தை சேர்ந்த 1500 பேர் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நடைபெற இருக்கும் அக்டோபர் 4ம் தேதி 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அன்று கூடுதலாக மேலும் 1100 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருப்பதி மலையில் தற்போது பொருத்தப்பட்டுள்ள 1,300 சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்கப்படும். பிரமோற்சவ நாட்களில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மலையில் உள்ள அன்னதான கூடத்தில் காலை 8 மணி முதல் 11 மணி வரை  சிற்றுண்டியும், அதன் பின்னர் பகல் 11.30 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை ஒரு மணி வரை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படும்.இதுதவிர சுவாமி தரிசனத்திற்காக நான்கு மாடவீதிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சிற்றுண்டி, கலவை சாதங்கள், டீ, காபி, பால் ஆகியவை வழங்கப்படும். இந்தாண்டு மொத்தம் 15 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்களுடைய பக்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் சுவாமி ஊர்வலத்தின்போது பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்க உள்ளனர்.பிரமோற்சவ நாட்கள் ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும். மேலும், சிபாரிசு கடிதங்களுக்கும் அறைகள் ஒதுக்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tirupati Promotional , Tirupati ,arrangement,flowers ,decoration
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு:...