×

மாணவிகள், ஆசிரியைகளின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட பட்டதாரி பெண்: ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் பறிக்க திட்டம்

திருமலை: பள்ளி மாணவிகள், ஆசிரியைகளின் படங்களை சமூக வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்ட பட்டதாரி இளம்பெண் கைது செய்யப்பட்டார். ஆடம்பர வாழ்க்கை வாழ பணம் பறிக்க இவ்வாறு செய்தது தெரிய வந்தது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் உள்ள சில பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மற்றும் ஆசிரியையகளின் படங்கள் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பரவியது. இதை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் அப்பள்ளியை சேர்ந்தவர்கள் கடும் வேதனை அடைந்தனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு பெண், நான் இன்ஜினியரிங் பட்டதாரி. முகநூலில் நான் பதிவேற்றம் செய்திருக்கும் படங்களை அகற்ற வேண்டும் என்றால், நான் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதேபோல் கடந்த 20 நாட்களில் 4 பள்ளிகளை சேர்ந்தவர்களின் படங்களை மார்பிங் செய்து முகநூலில் ஆபாசமாக பதிவேற்றம் செய்து தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பிஎஸ்சி பட்டதாரி பெண்ணை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதை ஆய்வு செய்தனர். அதில் ஐதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் செயல்படும் 270 பள்ளிகளை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி உள்ளார். மேலும் இவர் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். இவர் ஆசிரியை, மற்றும் மாணவிகளின் படங்களை அந்தந்த பள்ளிகளின் வெப்சைட்டில் இருந்து பதிவிறக்கம் செய்து அதை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஆட்பரமாக வாழ பணம் தேவைப்பட்டதால் இந்த சமூக விரோத செயலில் அவர் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பள்ளிகள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதாக இருந்தால் பள்ளி நிர்வாகம் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு சமூக வலைதளத்திற்கும் உரிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. அதன் காரணமாகவே இதுபோன்ற சைபர் குற்றவாளிகள் தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றனர் என்றனர்.

Tags : Graduate Girl ,faculty ,Teachers , Pornography, graduate girl
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...