×

கர்நாடகாவில் நடைபெறவிருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: தகுதிநீக்க எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கர்நாடகாவில் நடைபெறவிருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸூம், மஜதவும் கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் 14 மாதங்கள் ஆட்சி நடத்தின. இதில் அமைச்சர் பதவி கிடைக்காததால் 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மஜத எம்எல்ஏக்களும் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தனர். அந்தக் கடிதங்களை ஏற்காத அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், 17 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்தார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில், குமாரசாமி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இந்நிலையில் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி, மாஸ்கி ஆகிய இரு தொகுதிகளை தவிர, 15 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய‌ம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 ஏம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு, முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி, என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 17 எம்.எல்.ஏ.,க்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி, சபாநாயகர், ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்து, தேர்தலில் போட்டியிட தடை விதித்தது சரியில்லை. அவர் சட்ட விதிகளை மீறியுள்ளார். எனவே, வழக்கு விசாரணை முடியும் வரை, இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்.

இல்லையெனில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும். அதுவும் இல்லையெனில், தகுதி நீக்க எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும், என வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 15 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால், இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் வரை தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? என நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதால், 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : Karnataka ,elections ,Supreme Court Karnataka Bypolls , Karnataka, by-election, Disqualified MLAs, Supreme Court, Election Commission
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்