திருச்சி: பருவமழை ,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகம் பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டி தீர்த்த நிலையில் சிறிய அளவிலான மழை தமிழகத்தில் பெய்துள்ளது. பொதுவாக அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கிவிடும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு விட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.38.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனிடையே திருச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தகவல் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூறுகையில்; பருவமழை தொடங்க உள்ள நிலையில் 4399 இடங்கள் அதிகம் பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
121 பல்நோக்கு மையங்கள் கடலோர மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டு , மாநில பேரிடர் மீட்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளுக்கான நவீன உபகரணங்கள் வாங்குவதற்காக 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர்; தகவல் தொழில்நுட்ப துறைக்காக முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் வெளிநாடு சுற்றுப் பயணம் மூலம் 11 ஆயிரத்து 974 கோடி முதலீடு பெற்று சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களிலுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

