×

தந்தையை போலீஸ் தாக்கியதை தடுக்கவந்த 5 வயது பெண் குழந்தைக்கு லத்தி அடி?

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ளது சவட்டையன் வலசை. இந்த ஊரில் நேற்று முன்தினம் இரவு ஊர் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் பங்கேற்று, மிதவை உள்ளிட்ட பேரிடர் காலத்தில் பயன்படுத்துவதற்கான பொருட்களை இறக்கி வைத்தனர். இதே கிராமத்தை சேர்ந்த சண்முகநாதனுக்கும், கிராமத்தைச் சேர்ந்து சிலருக்கும் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகாரிகளுடனும் சண்முகநாதன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் விலக்கிவிட்டு அவரவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கூட்டம் முடிந்து ஒரு மணிநேரம் கழித்து சண்முகநாதன் வீட்டிற்குள், திருப்புல்லாணி போலீஸ் நிலைய இரண்டாம் நிலை போலீஸ்காரர் ஒருவர் சென்று அவரிடம், ‘‘பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, விசாரணைக்கு காவல்நிலையம் வரவேண்டும்’’ என்று கூறியுள்ளார். ‘நான் எதற்காக வரவேண்டும்’ என சண்முகநாதன் கேட்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த போலீஸ்காரர் லத்தியால் தாக்கியதாகவும், தந்தையை அடிக்கவேண்டாமென சண்முகநாதனின் 5 வயது பெண் குழந்தை தடுத்ததாகவும் தெரிகிறது. ஆனாலும் தொடர்ந்து போலீஸ்காரர் அடித்ததில், குழந்தை மீது லத்தி பட்டதில் காயம் ஏற்பட்டது. முதுகில் காயமடைந்த குழந்தை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இதுதொடர்பாக எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா கூறும்போது, ‘‘பேரிடர் மீட்பு துறை அதிகாரிகள் நடத்திய கூட்டத்தின்போது சண்முகநாதன் தகராறு செய்திருக்கிறார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் புகார் அளித்ததன் பேரிலேயே போலீசார் விசாரணைக்கு சென்றுள்ளனர். குழந்தை தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசாரிடம் கேட்டபோது, ‘‘பேரிடர் மீட்பு குழுவினர் சண்முகநாதன் தங்களை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக தெரிவித்த புகாரின் பேரில் ரசீது தரப்பட்டுள்ளது. அதேநேரம் சண்முகநாதன் குழந்தை தாக்கப்பட்டதாக இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை. போலீஸ்காரர் விசாரணைக்கு சென்ற போது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் குழந்தை தாக்கப்படவில்லை’’ என்றனர்.

Tags : death ,girl child , The girl child, the police
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...