×

முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 ரூபாய் உதவித் தொகை: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ: முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மறுவாழ்வு கிடைக்கும் வரை, அவர்களுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு மாற்றான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு  அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூலை 31-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து,  அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிட்டதாகவும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம். மேலும் கைது  செய்யப்படும் நபருக்கு, அவரது மனைவியின் கருத்துக்களை கேட்டபிறகு ஜாமீன் வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் குறை தீர்ப்பு கூட்டத்துக்கு, உத்தர பிரதேச அரசு, நேற்று ஏற்பாடு செய்தது. இதில், 300க்கும் அதிகமான முஸ்லிம் பெண்கள் பங்கேற்று தங்கள், குறைகளை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, வக்பு வாரியத்தின் சொத்துக்களில், உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் படித்த பெண்களுக்கு, கல்வித்  தகுதி அடிப்படையில், அரசு வேலையும், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், இருப்பிட வசதி மற்றும் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட வேண்டும் என்றார். மேலும்,  முத்தலாக் நடைமுறையால், கணவனை பிரிந்த இஸ்லாமிய  பெண்களுக்கு, மறுவாழ்வு கிடைக்கும் வரை, ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவி தொகையும், வழக்கு விசாரணைக்கான உதவி தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Tags : Yogi Adityanath ,women ,Rs ,UP ,Muthalak , UP CM Yogi Adityanath announces Rs.
× RELATED மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...