×

இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: நாங்குநேரி-நாராயணன், விக்கிரவாண்டி-முத்தமிழ்ச்செல்வன்

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்குநேரியில் நாராயணன், விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் செப்டம்பர் 23ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேர் சென்னையில் கடந்த திங்கட்கிழமை  நேர்காணல் நடத்தினர். நேர்காணல் முடிந்ததும், அன்றைய தினமே வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்படவில்லை.
நாங்குநேரி தொகுதியில் பாஜ போட்டியிட விருப்பம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழக பாஜ தலைவர்கள் அதிமுக தலைமைக்கு திடீர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்டது. இதனால்தான் வேட்பாளர்கள் பெயர் கடந்த 2 நாட்களாக  அறிவிக்கப்படாமல் இழுபறியில் இருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள்,  மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெறும் இரண்டு தொகுதியில் ஒரு தொகுதியை பாஜ கேட்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அதிமுக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் பாஜகவுக்கு ஒரு சீட் வழங்கக்கூடாது. இரண்டு  தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும். அதே நேரம் இடைத்தேர்தலில் பாஜ நிபந்தனையற்ற ஆதரவை அதிமுகவுக்கு அளிக்க வேண்டும். பிரசாரத்துக்கு அவர்களை அழைக்கக் கூடாது. அழைத்தால் விழுகிற ஓட்டும் விழாது என்றும்  வலியுறுத்தி பேசினர். ஆனாலும், வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.கூட்டம் முடிந்த பிறகும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அதிமுக நிர்வாகிகள் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டு சென்றனர்.  இந்த ஆலோசனையின்போது, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை  ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 21-10-2019 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள்  அறிவிக்கப்படுகின்றனர். அதன்படி, விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் (விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அதிமுக செயலாளர்), நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் (திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற  இணை செயலாளர்) ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டதால் பாஜகவின் கோரிக்கையை அதிமுக தலைமை நிராகரித்து விட்டது உறுதியாகியுள்ளது.



Tags : Nanguneri-Narayanan ,constituencies ,AIADMK ,By-Elections , by-election ,constituencies, AIADMK , Nanguneri-Narayanan, Vikravandi-Muthamishelvan
× RELATED 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான...