×

கோவில்பட்டி அருகே தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: போலீசார் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

கோவில்பட்டி:  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போஸ்நகரைச் சேர்ந்தவர் மாணிக்கராஜா (38). இவரது மனைவி கிருஷ்ணவேணி (34). ஒரு மகள், மகன் உள்ளனர். பிரபல ரவுடியான இவர் மீது கோவில்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 54 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணிக்கராஜா சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார். நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக மாணிக்கராஜாவை கைது செய்ய கோவில்பட்டி போலீசார் பல இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகே கார்த்திகைபட்டி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் மாணிக்கராஜா பதுங்கி இருப்பதாக கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் போலீசார்  முகமது மைதீன், செல்வகுமார், அருண்குமார், செந்தில்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கார்த்திகைபட்டி கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

தோட்டத்தில் பதுங்கி இருந்த மாணிக்கராஜா, போலீசார் வருவதை பார்த்ததும், அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து போலீசார் விரட்டிச் சென்று மாணிக்கராஜாவை பிடித்தனர். ஆனால் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மல்லுக்கட்டிய மாணிக்கராஜா தான் வைத்திருந்த அரிவாளால் ஏட்டுக்கள் முகமதுமைதீன், செல்வகுமார் ஆகியோரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து தப்பியோடிய மாணிக்கராஜாவை பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா  துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். அதனை பொருட்படுத்தாமல் தலைதெறிக்க ஓடிய மாணிக்கராஜவை மடக்குவதற்காக அவரது காலில் சுட்டார். காலில் குண்டடிபட்ட மாணிக்கராஜா, தரையில் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயம் அடைந்த ஏட்டுக்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ரவுடி மாணிக்கராஜ், ‘கோவில்பட்டி பஸ்நிலையத்தில் நின்ற என்னை போலீசார் பிடித்து அழைத்துச் சென்றனர். பின்னர் எனது கண்களை கட்டி எங்கேயோ அழைத்துச் சென்று காலில் துப்பாக்கியால் சுட்டனர்’ என்று கூறி கதறினார்.


Tags : Kovilpatti , escape, Police firing , celebrity, rowdy
× RELATED தேசிய சிலம்ப போட்டி கோவில்பட்டி பள்ளி மாணவன் சாதனை