×

அரசு மருத்துவமனையில் கட்டிக்கும் கர்ப்பத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் 7 மாதமாக சிகிச்சை

ஊத்தங்கரை: பெண்ணின் வயிற்றில் உள்ள கட்டிக்கு கர்ப்பம் என்று கடந்த  7 மாதமாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஸ்வினி (22). இவருக்கு ஓராண்டுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் கல்லாவியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். சோதனையில் அஸ்வினி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஏழு மாதமாக கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தடுப்பூசி போடுதல், மாதாந்திர பரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளும் மருத்துவர்கள் அளித்து வந்துள்ளனர். மேலும், அஸ்வினி பெயரில் தனியாக தாய் மற்றும் சேய் நல அட்டை கொடுத்து அதில் வாரம் தவறாமல் சிகிச்சையும் அளித்து வந்துள்ளனர்.

கடந்த 19ம் தேதி மாதாந்திர பரிசோதனைக்கு சென்றபோது அஸ்வினி வயிறு கடுமையாக வலிப்பதாக மருத்துவரிடம் கூறியுள்ளார். டாக்டர் தெரிவித்தப்படி தர்மபுரியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது வயிற்றில் குழந்தை இல்லை நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்ததும் அஸ்வினி மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் அவர்கள் வேறொரு ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதிலும் அஸ்வினி வயிற்றில் குழந்தை ஏதும் இல்லை, நீர்க்கட்டி தான் உள்ளது என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அஸ்வினி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று கல்லாவி அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் கேட்டபோது, தெரியாமல் நடந்து விட்டது என அலட்சியமாக பதில் கூறினர்.

இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ‘அஸ்வினி வயிற்றிலுள்ள கட்டியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். கட்டி இருப்பது கூட தெரியாமல் கர்ப்பத்திற்கான சிகிச்சை அளித்தது தெரியவந்ததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதற்கு அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கரை கேட்டபோது  இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : hospital hospitalization ,hospitalization , Government Hospital, Treatment, Aswini
× RELATED சுனைனா மருத்துவமனையில் அனுமதி