×

திருவாரூர், கிருஷ்ணகிரி உட்பட 4 மாவட்டங்களில் இரண்டே நாட்களில் 10 சிறுவர், சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: அதிக கவனம் செலுத்த பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

திருவாரூர்: திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டே நாட்களில் சிறுவர், சிறுமியர் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கண்டிரமாணிகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையில் இருந்த ஆறாம் வகுப்பு மாணவி திவ்யா, செவ்வாய் கிழமை அன்று தனது சகோதரர் ஸ்ரீராமுடன் அருகில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கினர். இதில் உயிரிழந்த ஸ்ரீராமின் சடலம் மீட்கப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதே போன்று ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றில் குளித்த ஆறு வயதான விக்னேஷ் என்ற சிறுவனும், அவனது பக்கத்து வீட்டிற்கு பள்ளி விடுமுறையை கழிக்க வந்த செங்கனூரை சேர்ந்த வெங்கடேஷ் என்ற 12 வயது சிறுவனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கந்திகுப்பத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவரான ஸ்டீவன் வெர்னேவும், அவனது சித்தப்பா மகனான ஒன்றாம் வகுப்பு படித்து வந்த கெர்சோன் ராஜ் என்ற சிறுவனும் ஏரியில் குளிக்கச் சென்று உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த விகளத்தூர் கிராமத்தில் வெள்ளாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ஹரிகிருஷ்ணன் என்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சொக்கநாதபுரத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் அருகில் உள்ள நொண்டிகருப்பன் ஏரியில் குளித்துள்ளனர். அப்போது நீர்வரத்தால் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட 9ஆம் வகுப்பு பயிலும் ஜெகன், அன்பரசன் மற்றும ஆனைமுத்து ஆகியோர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். மூவரும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரே ஆண் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க விரும்பும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று குளிக்கின்றனர். இந்த நிலையில் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகியது. வீட்டின் அருகாமையில்தான் விளையாடுகிறார் என்று அலட்சியமாக இருந்து விடாமல், யாருடன், எங்கு சென்று விளையாடுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும். வெளியில் சென்று விளையாடும் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முடிந்த அளவிற்கு பெரியவர்களின் மேற்பார்வையில் பிள்ளைகளை விளையாட வைப்பது விபரீதத்தை தடுத்து நிறுத்த வழிவகுக்கும்.

Tags : boys ,girls ,parents ,Krishnagiri ,districts ,Thiruvarur , Thiruvarur, Krishnagiri, children, drowning, death
× RELATED பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத...