×

அரசு பஸ் - பள்ளி வேன் மோதல்: சுற்றுலா வந்த 11 குழந்தைகள் உயிர் தப்பினர்

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழியில் நேற்று காலை அரசு பஸ்-பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் திற்பரப்புக்கு சுற்றுலா வந்த 11 குழந்தைகள் உயிர் தப்பினர். தூத்துக்குடியில் இருந்து ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 11 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஒரு வேனில் திற்பரப்புக்கு சுற்றுலா வந்தனர். நேற்று காலை ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை கடக்க முயன்றனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு சென்ற எண்ட் டூ எண்ட் பஸ் எதிரே வந்தது.

ஒரே நேரத்தில் பஸ்சும், வேனும் பேரிகார்டுகளை கடக்க முயன்றதால் பஸ்சும், வேனும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட வேன் டிரைவர் படுகாயமடைந்தார். வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் வேனுக்கு உள்ளேயே தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டனர். படுகாயமடைந்த வேன் டிரைவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தையடுத்து நாகர்கோவில்- திருநெல்வேலி சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இரு வாகனங்களையும் அப்புறப்படுத்தி விட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : school van ,School , Government Bus, School, Travel
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி