×

அமித்ஷா மும்பை பயணம் திடீர் ரத்து: சிவசேனாவுடன் தொகுதி பங்கீட்டில் சிக்கல்?

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாததால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இதுபோலவே நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருகட்சிகளும் 135 தொகுதிகளில் போட்டியிடவும் மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கவும் தொடக்கத்தில் முடிவு செய்திருந்தன. ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனாவை விட பாஜக கூடுதல் தொகுதிகளில் வென்றதால் தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக நிர்வாகிகள் கோரி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதகிகளில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. ஆனால் பாஜக 23 தொகுதிகளிலும், சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக கூடுதலாக வாக்குகளையும் பெற்றிருந்தது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதலாக இடங்கள் வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.

சிவசேனாவுக்கு 120 தொகுதிகள் மட்டுமே வழங்க பாஜக முன் வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்க சிவசேனா கட்சி மறுத்து வருகிறது. இதனால் இருகட்சிகள் இடையே கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு அதிகமான இடம் வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்து இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. 122 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக 63 இடங்களில் வென்ற சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

இதனிடையே பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாளை மும்பை செல்ல திட்டமிட்டு இருந்தார். மும்பையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றி கட்சிக்கு ஆதரவு திரட்டுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர்களும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிப்பதால் அமித்ஷாவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷாவின் மும்பை பயணத்துக்குள் தொகுதி பங்கீட்டை முடித்து விட பாஜகவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இழுபறி நீடிப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் சிவசேனா தலைவர்களை சந்திப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என அமித்ஷா கருதுவாக கூறப்படுகிறது. அதுபோலவே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உள்ளூர் பாஜக தலைவர்களும், சிவசேனாவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அமித்ஷா வந்தால் அவர் தலையிடும் சூழல் ஏற்படுவதை தடுக்கவுமே அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு முடிவதற்குள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதிலும் சிக்கல் இருப்பதால் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : trip ,Mumbai ,Amit Shah ,Shiv Sena , Amit Shah, Mumbai Travel, Cancel, Shiv Sena, Volume Sharing, Trouble?
× RELATED 3 மாதத்தில் மீண்டும் பாஜ ஆட்சி; உத்தவ்...